kamani kavithaigal


பழிதீர்க்க உடைவாளை....


புத்தரை பூஜிக்கும்
லாமாக்களின் உதடுகள்
சரணம் சொல்லி
மகிழாமல் - தமிழரின்
மரணம் சொல்லி
மகிழ்ந்தது.

அசோகனின் சக்கரம்
அடக்க முடியாமல் சுழன்று
ஆயிரக்கணக்கான
தமிழர் உயிர்களை
குடித்தது.

கங்காருவின் பையில்
குட்டிக்கு பதிலாய்
குண்டுகள் நிரப்பப்பட்டன.
அது எகிறி குதித்ததில்
எரிந்த உயிர்கள்
சிதைந்த உடல்கள்
சிலுவையை
வெட்கப்பட வைத்தது.

உரிமை வாழ்வை
சிறை மீட்க
உயிரிழந்த போராளிகள்
உரிமையின்
அடையாளமானார்கள்.
மிருக வேட்டை
முடிவடைந்து
தமிழர் வேட்டை
தொடங்கியது.

புத்தன் பெருமை
சொல்லிய பூமி
மகிந்தாவால்
தமிழர் ரத்தப்
பெருமையால்
நிறைந்தது
ஈழ மண்ணில்.

தலைமறைவாய்
தணலில் நின்று
தம் மக்கள் காக்கும்
களபலியாய் மாவீரர்கள்
மகுடம் தரித்தார்கள்.

லட்சியம் காக்க
தம் உயிரை
அலட்சியம் செய்த
மறவர்களின்
ஈக பூமியாய் எமது
தமிழீழ மண்.

கருத்து சொன்னால்
கருப்புச் சட்டம்
காந்தி தேசத்தின்
நடைமுறையானது.
பேசும் உரிமைமீது
சட்டத்தின் தேர்கால்கள்.
எழுதும் கோலின்மீது
ஏவலரின் அடக்குமுறைகள்.

பிரார்த்தனைகளும்
வாழ்த்துக்களும்
எழுதுவதற்கே
விற்பனையானது
பேனாக்கள்.
அடக்குமுறைக்கெதிராய்
தலைசாய்க்கும்
பேனாக்கள்மீது
தடுப்பு சட்டம்
தாவி மிதிக்கும்.

புலம்பலுக்கு
முற்றுப் புள்ளியாய்
புறப்பட்டது
ஒரு போர் வாள்.
அடக்குமுறைக்கு
பழிதீர்க்க உடைவாளை
உடைமையாக்க
கூவி அழைத்தது.

இன்னுமாய் விழுந்துகிடக்க
தமிழினம் அடிமையல்ல.
உறைவிட்டு கிளம்பட்டும்
உடைவாள்.
உடைவான் பகைவன்
எழும் தமிழீழம்!!!

பதிவு: கண்மணி

மீள் பதிவு: கரும்புலிகள் உயிராயுதம்

1 comment:

  1. என் மண்ணின் இனமிற்கு செய்யப்பட்டது கொடுமையிலும் கொடுமை..நான் படித்த
    வடுக்களும் வலிகளும் என்ற தலைப்பில் படித்த கவிதை
    http://manam.online/Tamil-Poem-Sharmila

    ReplyDelete