தஞ்சையில் உருவாகும் முள்ளிவாய்க்கால் ஈகிகள் முற்றம்

தஞ்சையில் உருவாகும் முள்ளிவாய்க்கால் ஈகிகள் முற்றம்
- முள்ளிவாய்க்கால் - ஊரின் பெயரல்ல. - உலகத் தமிழர்களின் கொதிப்புணர்வின் குறியீடு முள்ளிவாய்க்கால். - நமது சகோதரத் தமிழர்களைப் பதைக்கப் பதைக்கப் படுகொலை செய்து சிங்கள இனவெறியர்கள் நடத்திய வெறியாட்டத்தின் இரத்த சாட்சியம் - முள்ளிவாய்க்கால். - தமிழர் நெஞ்சங்களில் என்றென்றும் பதிந்திட்ட சொல் - முள்ளிவாய்க்கால் பழமையும் பெருமையும், பெருமிதமும் மிக்க தமிழர் வரலாற்றில் படிந்துவிட்ட இந்தத் துயரக் கறையைத் தமது உயிர்களைச் சிந்திக் கழுவ முன்வந்தனர் முத்துக்குமார் உட்பட 18 ஈக மறவர்கள். முள்ளிவாய்க்கால் மக்களையும், அவர்களுக்காகத் தீயில் கருகி தங்களின் இன்னுயிர்களை ஈகம் செய்த தீந்தமிழ் மறவர்களையும் என்றென்றும் மறவாமல் நினைவுத்தூண்கள் எழுப்புவதற்கான அடிக்கற்கள் நாட்டும் விழா கடந்த 2-6-10 அன்று தஞ்சையில் நடைபெற்றது. இதுவரை தமிழகம் கண்டறியாத சிறப்புடனும் முற்றிலும் புதுமை நிறைந்த முறையிலும் தமிழரின் சிற்பக் கலையின் சிறப்பை எடுத்துக்காட்டும் வகையிலும் நினைவுத் தூண்கள் அமைக்கும் பணி தஞ்சையில் நடைபெற்று வருகிறது. சோழ மாமன்னன் இராசஇராசன் தஞ்சையில் மாபெரும் கற்கோயிலை எழுப்பினான். ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் அது கம்பீரமாகக் காட்சி தருகிறது. தமிழர்களின் சிற்பத் திறனுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. அதே தஞ்சையில் மற்றொரு கற்கோயில் எழுப்பப்பட்டு வருகிறது. இராசஇராசன் எழுப்பிய தஞ்சைக் கற்கோயிலுக்குப் பயன்படுத்திய அதே இரக கற்கள் கண்டறியப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெரும் பொருட் செலவில் தஞ்சைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. 50 டன்னிற்கு மேலான எடையும் 40 அடி நீளமும் 10 அடி உயரமும் 3 அடி கனமும் கொண்ட பெரும் கற்களில் நூற்றுக்கு மேற்பட்ட சிற்பிகள் இரவு பகலாக அற்புதமான சிற்பங்களைச் செதுக்கி வருகிறார்கள். முள்ளி வாய்க்காலில் படுகொலை ஆகி வீழ்ந்து கிடக்கும் மக்களின் அவலக் காட்சியும், முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டுப் புலம்பும் மக்களின் துயரக் காட்சியும், முத்துக்குமார் உட்பட தமிழ்நாட்டிலும் உலக நாடுகளிலும் உயிர்த் தியாகம் செய்த ஈகிகளின் சிலைகளும் செதுக்கப்பட்டு வருகின்றன. ஓவிய மண்டபம் ஒன்றும் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முக்கிய நிகழ்ச்சிகள் ஓவியங்களாக வரையப்பட்டு இங்கு வைக்கப்படும். தமிழகத்தில் இதுவரை இத்தகைய சிற்ப நினைவகம் அமைக்கப்பட்டதில்லை என்று சொல்லுமளவிற்கு இது உருவாக்கப்பட்டு வருகிறது. அழியாமல் நின்று ஆயிரமாயிரம் மக்களின் துயரத்தைத் தமிழர்களுக்குத் தலைமுறை தலைமுறையாக நினைவூட்டும் வகையில் எழுப்பப்பட்டு வருகிறது. இந்த மாபெரும் பணியில் உலகத் தமிழர்கள் ஒவ்வொருவரின் பங்கும் இருக்க வேண்டும் என உலகத் தமிழர் பேரமைப்பு விரும்புகிறது. வேண்டுகிறது.

காசோலை அல்லது வரைவோலை அனுப்புபவர்கள் "World Tamil Confederation Trust" என்ற பெயரில் எடுத்து அனுப்ப வேண்டும்.

நிதி அனுப்ப வேண்டிய முகவரி பழ. நெடுமாறன் தலைவர்,
உலகத் தமிழர் பேரமைப்பு 58,
மூன்றாவது முதன்மைச் சாலை,
ஆழ்வார் திருநகர் விரிவாக்கம்,
சென்னை-600 087.
தொலைபேசி : +91-44-23775536,
தொலை நகலி : +91-44-23775537,
மின்னஞ்சல் : thamiz@thenseide.com
வங்கிக் கணக்கு விவரம் : உலகத் தமிழர் பேரமைப்பு (World Tamil Confederation) கணக்கு எண் : 457022479 இந்தியன் வங்கி, மயிலாப்பூர் கிளை. சென்னை - 600 004.

No comments:

Post a Comment