som prakash singh mla bihar

சென்னையில் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு பீகார் எம்.எல்.ஏ. வாழ்த்து

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக, சென்னையில், தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கல்லூரி மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக, பீகார் மாநில சுயேட்சை எம்.எல்.ஏ. சோம்பிரகாஷ் சிங் நேற்று சென்னை வந்தார். 

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் சட்டப்பல்கலைக்கழகம் வளாகத்தில் தொடர் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களை சந்தித்து, வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இலங்கை தமிழர்களின் பிரச்சினை தொடர்பாக பேஸ்புக்கில் வெளியான படங்களை கண்டு அதிர்ச்சியடைந்தேன். பின்னர் தமிழகத்தை சேர்ந்த நண்பர்கள் மூலம் இலங்கையில் உள்ள அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட விபரங்களை தெரிந்துகொண்டேன்.

பீகார் மாநிலத்தில் உள்ள புத்தகயாவுக்கு வந்த இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு தைரியமாக கறுப்புகொடி காட்டி தமிழர்கள் சார்பில் எதிர்ப்பு தெரிவித்தேன். இது என்னுடைய கடமை. ஒரு இனத்தையே கொத்து கொத்தாக அழித்த ராஜபக்சேவுக்கு சரியான தண்டனை வழங்கப்பட வேண்டும்.

ராஜபக்சே இந்தியாவின் பொது எதிரி. அவருக்கு மத்திய அரசு எந்த உதவிகளையும் செய்யக்கூடாது. எனவே ராஜபக்சேவுக்கு எதிராக போராடத் தொடங்கியுள்ளேன். என் போராட்டம், ராஜபக்சேவுக்கு தண்டனை வாங்கித்தரும் வரையிலும், இலங்கை தமிழர்கள் சுதந்திரமாக வாழும் வரையிலும் தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

1 comment: