Thiyagi Thileepan 23rd Anniversary

தியாகி தீலீபன் 23 ஆம் நினைவு தினம்



தியாகி தீலீபன் அவர்களின் நீரின்றிய உண்ணாவிரதப் போராட்டம் தமிழீழ விடுதலைப் போரின் ஆன்ம உறுதியை நிலைநாட்டிய நிகழ்வு. ஆயுதம் தரித்துப் போராடிய வீரன் அகிம்சை வழியிலும் தன்னால் தாயக விடுதலைக்காக உறுதியுடன் போராட முடியும் என உலகிற்கு எடுத்துக்காட்டி செப்ரம்பர் மாதம் 15 ஆம் நாள் 1987 ஆம் ஆண்டு தனது நீரின்றிய உண்ணாநோன்பைத் தொடங்கி வைத்தான். பன்னிரண்டு நாட்கள் வெறும் வயிற்றுடன் நீதிகேட்டுப் போராடிய தியாகதீபம் திலீபன் இந்திய தேசத்தைத் தலைகுனியவைத்து தன்னுடலை உருக்கி தன்னுயிரை அழித்துக்கொண்டான். 1987 ஆம் ஆண்டு ஈழத்தமிழ் மக்களின் சார்பாக அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி அப்போதைய சிறிலங்கா அரச தலைவர் ஜே.ஆர். ஜெயவர்த்தனவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி இந்தியப் படைகள் தமிழர் தாயகத்தில் நிலைகொண்டனர். ஈழத்தமிழர்களின் தேசத்தில் அமைதியை ஏற்படுத்தவந்த படைகள் சிறிலங்காவில் நடந்துகொண்டிருந்த நில ஆக்கிரமிப்பைக் கண்மூடிப் பார்த்துக் கொண்டிருந்தபோது விடுதலைப்புலிகளின் தலைமைப்பீடம் அவசர ஒன்றுகூடலைச் செய்தது. இந்திய தேசத்திடம் நீதி கேட்டு அமைதிவழியில் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுப்பது எனத் தீர்மானிக்கிறார்கள். அப்போது யாழ்மாவட்டத்தின் அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்த திலீபன் அவர்கள் தானே அந்தப்பயணத்தைத் தொடக்கிவைப்பதாகக் கூறுகிறார். யாழ்மாவட்டத்தில் உள்ள ஊரெழு என்ற கிராமத்தில் 1963 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி பிறந்த திலீபன் தனது 23 ஆவது வயதில் காந்திய வழியில் தியாக பயணத்தைத் தொடங்குகிறார். ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து தனது உண்ணாவிரதத்தைத் தொடங்கிய திலீபன் செப்ரம்பர் மாதம் 26 ஆம் நாள் காலை 10. 48 மணிக்கு உயிர் துறக்கிறார். தியாகி திலீபன் முன்வைத்த ஐந்து கோரிக்கைகளும் மிகவும் அடிப்படையானவை. அவையாவன: 1). மீளக்குடியமர்தல் என்ற பெயரில் இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் புதிதாக திட்டமிடப்படும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும். 2). சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும். 3). அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும். 4). ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும். 5). தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும். அப்போதைய இந்திய அரசு நினைத்திருந்தால் 24 மணித்தியாலத்திற்குள் குறிப்பிட்ட கோரிக்கைகளுக்குத் தீர்வு கண்டிருக்கமுடியும். அவர்கள் தாங்கள் சொல்வதையே ஈழத்தமிழர்கள் கேட்கவேண்டும் என்ற மனோபாவத்துடன் சிறிலங்கா அரசுடன் சேர்ந்து தியாகி திலீபனின் கோரிக்கைகளை ஏற்க மறுத்தனர். உண்ணாவிரதம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது யாழ்நகருக்கு வருகைதந்த ஜேஎன் டிக்சிற் குறிப்பிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி கொடுத்தார். முன்னரும் இதுபோன்ற வாக்குறுதிகளைக் கொடுத்தே விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களை ராஜீவ் காந்தி சந்திக்கவிரும்புவதாகச் சொல்லி இந்தியாவுக்குக் கூட்டிச்சென்றிருந்தனர். ஈழத்தமிழ் மக்களின் பிரதிநிதி என்ற அடிப்படையில்தான் அந்தச்சந்திப்பு நடைபெறும் எனவும் கூறப்பட்டிருந்தது. ஆனால் அங்கே சென்ற பிரபாகரன் அவர்களை அசோகா ஹோட்டலின் அறையொன்றில் தங்கவைத்து தங்களால் வடிவமைக்கப்பட்ட ஒப்பந்தத்தை ஏற்காவிட்டால் மீண்டும் தமிழீழம் செல்ல முடியாது என்று மிரட்டியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறான கசப்பான அனுபவங்களால் குறிப்பிட்ட கோரிக்கைகளுக்குத் தீர்வு காண்பதாக உண்ணாவிரத மேடைக்கு வந்து அங்குள்ள மக்களின் சாட்சியாக வாக்குறுதியளிக்குமாறு பிரபாகரன் அவர்கள் கேட்டுக்கொண்டார். அதற்கு ஜேஎன் டிக்சிற் உடன்படமறுத்தார்; ஏனென்றால் ஜேஎன் டிக்சிற் அப்படிப்பட்ட மனிதர். இந்திய வல்லாதிக்கத்தின் துாதுவராகவே அவர் இருக்கவிரும்பினார். ஈழத்தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சனைகளையோ அல்லது ஒரு சிறுபான்மை இனத்திற்கு எதிராக நிகழ்ந்துகொண்டிருக்கும் அடக்குமுறைகளையோ தீர்த்துவைக்க விரும்பவில்லை. தியாகி திலீபன் அவர்களின் தியாக மரணத்தைத் தொடர்ந்தும் இந்திய அரசு தனது போக்கை மாற்றிக்கொள்ளவில்லை. பிரபாகரன் அவர்களைக் கலந்துரையாட இந்தியப் படைமுகாமுக்கு வருமாறு கூறி அங்கேயே சுட்டுக்கொல்லும்படி இந்திய துாதர் ஜேஎன் டிக்சிற் ஊடாக இந்தியத் தளபதிக்குக் கட்டளை வழங்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொள்வதற்கு அப்போதைய இந்தியத் தளபதி மறுத்துவிட்டார். அதனைத் தொடர்ந்து விடுதலைப்புலிகளின் மூத்த தளபதிகளான குமரப்பா, புலேந்திரன் உட்பட பன்னிரண்டு உறுப்பினர்களின் சாவிற்கும் இந்தியா மறைமுகக் காரணமானது. இந்தத் தொடர்நிகழ்ச்சிகளின் காரணமாக ஏற்பட்ட இந்திய-புலிகள் யுத்தமும் அந்த யுத்தத்தில் ஏற்பட்ட கசப்பான நிகழ்வுகளும் அதன் நீட்சியாக ராஜீவ்காந்தி கொல்லப்பட்டதும் அதற்குப் பழிவாங்கவேண்டும் என்ற எண்ணத்தில் ஆயிரக்கணக்கில் அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதும் வரலாற்றின் கசப்பான பக்கங்கள். இந்திய வல்லரசு மனப்பான்மை ஒரு சிறுபான்மைத் தேசிய இனத்தின் அபிலாசைகளை எரித்து அழித்துவிட்டமையை இந்த நிகழ்வுகளின் ஊடாக தெளிவாக அறிந்துகொள்ளமுடியும். இந்திய தேசத்தின் ஒரு பகுதியில் ஈழத்தமிழ் சொந்தங்களின் உடன்பிறப்புகளான தமிழகத்துத் தமிழர்கள் வாழும்வரை இந்திய வல்லரசு என்பது ஈழத்தமிழர்களின் பாதுகாப்புக் கவசமாகவே இருந்திருக்கவேண்டும். அவ்வாறானதொரு உறவுநிலையே இந்தியாவின் கேந்திர நலன்களுக்கும் பாதுகாப்பாக இருந்திருக்க முடியும். ஆனால் தமிழர்களுக்குள் காலங்காலமாகவே உருவாகிக் கொண்டிருக்கும் எட்டப்பர்கள் போலவே இந்திய தேசத்தில் உள்ள அதன் வெளியுறவு இராசதந்திர ஆலோசகர்களும் தமது தனிப்பட்ட மற்றும் சமூக பிரதேசவாத நிலைப்பாடுகளால் தமிழர்களுக்குக் கௌரவமான தீர்வு வருவதையோ அல்லது தனிநாடு உருவாவதையோ தடுத்துவருகிறார்கள். காந்திய வழியில் போராடிய திலீபன் அவர்களின் போராட்டம் ஈழத்தமிழ் மக்களில் மூட்டிய விடுதலை நெருப்பு இன்னும் எரிந்துகொண்டிருக்கிறது. தாயக விடுதலை நோக்கிய திலீபனின் பயணம் இன்றில்லாவிட்டாலும் என்றோ ஒருநாள் உலக சரித்திரத்தில் நிச்சயம் இடம்பெறும். தாயகவிடுதலைக்கான ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டாலும் தியாகி திலீபன் போன்ற தியாக மறவர்களின் அர்ப்பணிப்புகள் உருவாக்கிய விடுதலை வேட்கை என்றுமே வீணாகிவிடாது. தியாகி திலீபன் விரும்பிய மக்கள் எழுச்சியே விடுதலைக்கான பாதைகளைத் திறக்கும். அப்போது நிச்சயம் இந்தியாவின் மனச்சாட்சியும் கண்ணைத் திறக்கும்.

1 comment:

  1. Anan thileepan, may your soul rest in peace forever.
    what could we world tamil diaspora can do for your great martydom?????? i missed you so muchhh

    ReplyDelete