25, ஜூலை 2012 தேதியிட்ட இந்தியா டுடே பத்திரிக்கையில் (மதிமுக) திரு.வைகோ அவர்களின் அரசியல் நிலை குறித்த செய்தி.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் வைகோவை பிடிப்பது சற்று கடினமாக இருக்கிறது. எல்லா கட்சித் தலைவர்களையும் போல அவரும் பிஸிதான். ஆனால், பெரும்பாலான எதிர்க்கட்சித் தலைவர்களைப் போல “மக்கள் கொடுத்த ஓய்வை ” அனுபவித்துக் கொண்டிருப்பவராக அவர் இல்லை. அவர் எல்லா நாட்களிலும் ஏதேனும் ஒரு போராட்டக் களத்தில், தமிழகத்தின் அந்த பத்திரிகைச் செய்திகளை அவராகவே தான் எழுதுகிறார். 2011 சட்டப் பேரவைத் தேர்தலில், கூட்டணி வாய்ப்பாட்டில் ஏற்பட்ட கணக்கு தப்பாகிப்போக, தேர்தல் களத்திலிருந்தே வெளியேற வேண்டிய துர்பாக்கியம் ஏற்பட்டது வைகோவுக்கு. மற்ற கட்சியினர் எல்லோரும் தேர்தல் சுற்றுப் பயணத்தில் சூறாவளியாக இருக்க அவர் “சீட்டுக் கிடைக்காத துரோகத்தால்” துவண்டு போய் விடவில்லை. மாறாக, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் விவகாரத்தில் பரபரப்பாக இருந்தார். மறுபடியும் வரலாறு தனக்களித்த வாய்ப்பை கைநழுவ விட்டு விட்டார் என்று அவரை விமர்சிப்பவர்கள் பலரும் கருதினார்கள்.
இலங்கையில் முள்ளிவாய்க்கால் சோகம் நிகழ்ந்த பிறகு இனி வைகோ பேசுவதற்கு என்ன மிச்சம் இருக்கிறது என்று யோசித்தார்கள். ஆனால், அவரது எதிர்காலம் அப்படியொன்றும் இருள் மிகுந்ததாக இல்லை. ஆரம்பித்து பதினெட்டு ஆண்டுகள் கழிந்த நிலையில் ம.தி.மு.க. வரலாற்றுப் பாடங்களை மெல்ல மெல்ல படிக்கத் தொடங்கி இருப்பதாகவே தெரிகிறது. இதுவரையிலான வைகோவின் அரசியல், பெரும்பாலும் தி.மு.க. அல்லது அ.இ.அ.தி.மு.க. எதிர்ப்பு, ஈழ விடுதலை ஆதரவு என்கிற இரு அம்சங்களைக் கொண்டிருந்ததாகவே மக்கள் மத்தியில் தோற்றம் கொண்டிருந்தது. இரு பெரும் கழகங்களில் ஒன்றின் துணையை நாடாமல் தனிக்குடித்தனத்தைத் தொடர முடியாத கட்சியாகவும் அது பார்க்கப்பட்டது. விஜயகாந்தின் தே.மு.தி.க.வின் வருகை ம.தி.மு.க.வை நான்காவது இடத்தில் வைக்கும்படியான நிலையையும் உருவாக்கியது. ஆனால், இந்தச் சூழலை எதிர்கொள்வதற்கான வியூகத்தை இப்போது வைகோ வகுத்திருக்கிறார். அவர் அதற்காக எந்த ஏதேனும் ஒரு மூலையில், போர்க்கொடி உயர்த்தியவாறு நிற்கிறார். அல்லது ஏதேனும் ஒரு பிரச்சினைக்காக நீதிமன்றத்தின் படிகளில் ஏறுகிறார். சில சமயம் ஒரு வக்கீலாகவும் கூட. அல்லது, அவரது அலுவலகத்தில் இருந்து மிக நீளமான ஒரு செய்திக்குறிப்பு வெளி வருகிறது. பாசாங்கற்ற, உணர்ச்சிகரமான சாணக்கியத்தனத்தையும் செய்ய வில்லை. நேரடியாக கள அரசியலை கையில் எடுத்திருக்கிறார். அவரது அரசியலின் மையப் புள்ளியாக தமிழக மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் விஸ்வரூபம் எடுத்துள்ளன. நதிநீர்ப் பிரச்சினை, விவசாயம், சுற்றுச்சூழல், ஊழல் எதிர்ப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை அவர் முன்னிலைப்படுத்துகிறார். “அத்தகைய பிரச்சினைகளை முன்னெடுப்பதற்கான தகுதியையும் அவர் வைத்துக் கொண்டிருக்கிறார் என்பதுதான் முக்கியமானது. அரசியல் தளத்தில் மற்றவர்கள் அம்பலப்பட்டு நிற்கும் நேரத்தில், மக்களுக்கு வைகோ
வித்தியாசமானவராகத் தெரிகிறார்”
வைகோ ஒரு மிகச் சிறந்த பேச்சாளர், இதுவரை அவர் மீது எந்த ஊழல் புகாரும் சுமத்தப்படவில்லை. குடும்ப அரசியலில் அவர் ஈடுபடவில்லை. அவர் திராவிட இயக்கத்தின் பிரதிநிதி. ஆனால் தமிழ் தேசியவாதிகள் மத்தியிலும் அவருக்கு கணிசமான ஆதரவுள்ளது. இந்திய அரசியலில் எல்லாக்கட்சித் தலைவர்களும் மதிக்கத் தகுந்தவராக அவர் இருக்கிறார். கேரளத்தில் அரசியல் சாசனத்துக்கு விரோதமான ஒரு சட்டம் நிறைவேற்றப் பட்டபோது, பிரதமர் மன்மோகன் சிங் முன் நின்று, இந்தியாவின் ஒருமைப்பாட்டை நீங்கள் சிதைத்துவிடாதீர்கள் என்று அவரால் முழங்க முடிகிறது. அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம் கை குலுக்கி, பிரஸ்ல்ஸில் போர் குற்றங்களுக்கு எதிராகப் பேசி சர்வதேச அரசியல் தளங்களிலும் உலா வர முடிகிறது. இதுபோன்ற பன்முக அரசியலையும், அணுகுமுறையையும் இன்றைய தமிழக அரசியல்வாதிகளில் எவரிடமும் காண முடியவில்லை என்று பலரும் கருதுகிறார்கள். முல்லைப் பெரியாறு, பெண்ணையாறு, அமராவதி, சிறுவாணி போன்ற நதி நீர் பிரச்சினைகள், கூடங்குளம், ஸ்டெர்லைட் போன்ற சுற்றுச்சூழல் பிரச்சினைகள், கல்வி போன்றவற்றில் மத்திய-மாநில அதிகாரப் பிரச்சினைகள், மது, போதைப் பொருள் பிரச்சினைகளில் தமிழகத்தின் நலன்களைப் பேணும் தலைவராக அவர் உயர்ந்திருக்கிறார்.
No comments:
Post a Comment