manitham in tamilina padukolai



இலங்கை அரசு பறிமுதல் செய்த புத்தகங்களை விடுவிக்க வேண்டும்: மனிதம் தொண்டு நிறுவனம் ஜெயலலிதாவிடம் கோரிக்கை
19 05 2011
இலங்கையில் பறிமுதல் செய்யப்பட்ட தமது புத்தகங்களை விடுவிப்பதில் தலையிடுமாறு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் சென்னையில் உள்ள மனிதம் தொண்டு நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான புத்தகங்கள் எனக்கூறி இலங்கையில் பறிமுதல் செய்யப்பட்ட புத்தகங்களை விடுவிக்க வேண்டும் என அப்புத்தகங்களை சென்னையிலிருந்து அனுப்பிய மனிதம் இண்டர்நேஷனல் என்ற தொண்டு நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்தப் பிரச்னையை இந்திய அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது. மனிதம் தொண்டு நிறுவன அமைப்பாளர் அக்னி சுப்பிரமணியம் தமது புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டமை குறித்து செய்தியாளர்களிடம் பேசியபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மனிதம் இண்டர்நேஷனல் மனித உரிமைகளுக்காக பன்னாட்டு தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து செயலாற்றி வருகிறது. எங்கள் நிறுவனம் இலங்கையில் கடந்த 2009ல் நடைபெற்ற போர்க் குற்றங்கள் குறித்த தகவல்கள் அடங்கிய தமிழினப் படுகொலை மற்றும் என்ன செய்யலாம் இதற்காக' என்ற இரண்டு புத்தகங்களை வெளியிட்டது.

அயர்லாந்தில் உள்ள பன்னாட்டு தீர்ப்பாயத்தில் நடைபெற்று வரும் இலங்கை அரசு மீதான போர்க் குற்றம் குறித்த வழக்கில் இந்த புத்தகங்கள் சாட்சி ஆவணங்களாகச் சேர்க்கப்பட்டுள்ளன. எனவே இது குறித்து பல்வேறு மனித உரிமை அமைப்புகளின் பார்வைக்கு அளிக்கும் முகமாகத்தான் இப்புத்தங்கள் கனடா நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

45 பெட்டிகளில் 1, 500 புத்தகங்கள் கடந்த மே 9ம் தேதி சென்னையிலிருந்து கப்பல் மூலம் கனடாவின் டொரண்டோ நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இவை கொழும்பு துறைமுகம் வழியாகக் கொண்டு செல்லப்படுவதை எப்படியோ தெரிந்து கொண்ட இலங்கை அரசு கப்பலிலிருந்து கண்டெய்னரை இறக்கி புத்தகங்களைப் பறிமுதல் செய்துள்ளது.

மேலும் அப்புத்தகங்கள் அனைத்தும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவை என ஒரு பொய்யான தகவலையும் தெரிவித்துள்ளது. இது உண்மைக்குப் புறம்பானது.அப்புத்தகங்களில் இடம்பெற்றுள்ள தகவல்கள், படங்கள் அனைத்தும் ஏற்கெனவே பல்வேறு பத்திரிகைகளில் பிரசுரமானவை. மேலும் இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலையின் நேரடிப் பதிவுகள்தான் அவை.

போர்க் குற்றங்கள் குறித்து இலங்கை அரசு மீது ஐ.நா புகார் கூறியுள்ள நிலையில் உலகம் முழுவதும் அதிபர் ராஜபக்ஷ மீதான பிடி இறுகி வருகிறது. இதனை திசை திருப்பவே பொய்யான தகவல்களை இலங்கை அரசு தெரிவிக்கிறது.

இனப்படுகொலை குறித்து உண்மைத் தகவல்கள் அடங்கிய புத்தகங்களைத்தான் அவர்கள் கைப்பற்றி உள்ளனர். கனடாவில் உள்ள மனித உரிமை அமைப்பு ஒன்றுக்கு அனுப்பப்பட்ட புத்தகங்களை பறிமுதல் செய்ய இலங்கைக்கு எவ்வித அதிகாரமும் இல்லை. எனவே தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்தப் பிரச்னையை இந்திய அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று பறிமுதல் செய்யப்பட்ட புத்தகங்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தொடர்ந்தும் வேண்டுகோள் விடுத்தார்

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts with Thumbnails