

ஒரு நோக்கதிற்காக் உயிரை மாய்த்துக் கொள்வது இழிவானது என்றால் அன்னா ஹஸாரே ஊழலை ஒழிக்க சாகும்வரை தொடங்கிய உண்னாவிரதமும் இழிவானதுதானே? ஆனால் அன்னா ஹஸாரேயின் ஒப்பந்த போராட்டம் தேசிய தியாகமாக மாறிவிடுகிறது செங்கொடி தூக்குத் தண்டனைக்கு எதிராக தனது உயிரை மாய்த்துக்கொண்டால் அது முட்டாள்தனம் என்று சொல்வதற்கு இங்கு மேதைகள் இருக்கிறார்கள்.
இலங்கைத் தமிழர்களின் பிரச்சினையில் முத்துக் குமார் என்ற இளைஞன் தன்னைத் தானே எரித்துக்கொண்ட பிறகுதான் தமிழர்களின் மனசாட்சி சற்றே கண் விழித்தது. இப்போது மூவரின் மரண தண்டனை விவகாரத்தில் நமது நியாய உணர்வை தூண்டுவதற்காக ஒரு இளம் பெண் தன்னைத் தானே உயிரோடு எரித்துக்கொண்டிருகிறாள். அன்னா ஹஸாரேயைப் போல செங்கொடி சாகும்வரை உண்ணாவிரதம் இருந்திருந்தால் அதை நம் ஊடகங்களோ ’அறவுணர்ச்சி’ மிக்க மத்தியதர வர்க்கமோ பொருட்படுத்துமா?
முத்துக் குமாரும் செங்கொடியும் செய்தது உணர்ச்சிவசப்பட்ட தற்கொலைகள் அல்ல. அவை ஒரு அரசியல் போராட்டத்தின் மனம் உருகச் செய்யும் தியாகங்கள். இந்த இளைஞர்களின் செயல் யாரையும் மனம் உடையச் செய்வது. இவை முன்னுதாரணம் ஆகக் கூடாது. ஆனால் எவ்வளவு கத்தினாலும் நீங்கள் மொளனமாகத்தான் கடந்து போவீர்கள் என்றால் தங்கள் நியாயத்தை சொல்வதற்கு ஒரு முத்துக் குமாரோ செங்கொடியோ தங்களைத் தாங்களே கொளுத்திக்கொண்டு உங்கள் முன்னே வந்து மன்றாடுவதைத் தவிர வேறு ஏதாவது வழி இருக்கிறதா?
ஒரு கருத்தை சொல்வதற்கு கூட அதன் விளைவுகள் குறித்து நூறு முறை யோசிக்கும் நாம் செங்கொடியை கோழை என்று அழைக்கக் கூடாது.by Manushya Puthiran
No comments:
Post a Comment