samacheer kalvi,bala cartoon



`சர்ச் பார்க்’ கல்விக்கு போட்டியா சமச்சீர் கல்வியா.. பணக்காரன் கவுரவம் என்னாத்துக்காகுறது..

இலங்கை அரசு மீது பொருளாதாரத் தடையை விதிக்க வேண்டும் -சட்டசபைத் தீர்மானம்

“தமிழனின் பண்பு யாருக்கும் தாழ்ந்தவனாக இருப்பதல்ல. யாரையும் தாழ்த்துவதல்ல” என்றார் பேரறிஞர் அண்ணா. இப்படிப்பட்ட உயரிய எண்ணத்தைக் கொண்ட தமிழர்கள் உலகெங்கும் பரவி இருக்கிறார்கள். மொழி மற்றும் கலாச்சார பாரம்பரியத்தில் ஒற்றுமையுடன் திகழும் இலங்கைத் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களுக்கும் இடையே உள்ள தொப்புள்கொடி உறவு அனைவரும் அறிந்த ஒன்றாகும். இலங்கைக்கு விடுதலை கிடைத்து விட்டாலும் அங்கு வாழும் தமிழர்கள் அவர்கள் நாட்டிலேயே இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுவதை எதிர்த்து இலங்கைத் தமிழர்கள் பல்லாண்டு காலமாக போராடி வந்தனர். இவர்களின் கோரிக்கைகளில் உள்ள நியாயத்தை உணர்ந்து, தேவையான அரசமைப்புச் சட்டத் திருத்தங்களை கொண்டு வந்து, தமிழர்கள் கவுரவத்துடனும், சம உரிமையுடனும், சுயமரியாதையுடனும் வாழ்வதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்காமல் அவர்களை முற்றிலும் ஒழித்துக்கட்ட இலங்கை அரசு நடவடிக்கை எடுத்தது. 1. பரவலாக குண்டுமழை பொழிந்து அப்பாவி மக்களை கொன்று குவித்தது; 2. மனிதர்கள் வாழும் இடங்களின் மீதும், மருத்துவமனைகள் மீதும் குண்டுகளை வீசியது; 3. மனிதாபிமான முறையில் செய்ய வேண்டிய உதவிகளை செய்ய மறுத்தது; 4. உள்நாட்டில் இடம் பெயர்ந்தவர்கள் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகப்படக் கூடியவர்கள் உட்பட இந்தச் சண்டையில் பலியானவர்கள் மற்றும் எஞ்சியுள்ளவர்கள் மீது மனித உரிமை மீறல்களை நிகழ்த்தியது; 5. இலங்கை அரசை விமர்சிப்பவர்கள் மற்றும் ஊடகங்கள் உட்பட போர்ப் பகுதிக்கு வெளியே இருப்பவர்கள் மீது மனித உரிமை மீறல்களை நிகழ்த்தியது, போன்ற கடுமையான, நம்பத்தகுந்த குற்றசாட்டுக்களை உள்நாட்டுப் போரின் போது இலங்கை அரசு நிகழ்த்தியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரால் நியமனம் செய்யப்பட்ட குழு கண்டறிந்து இருக்கிறது. எனவே, இத்தகைய போர்க் குற்றங்களை நிகழ்த்தியவர்களை போர்க் குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் எனவும்; தற்போது இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் அனைவரும், தங்களது சொந்த இடங்களுக்கு திரும்பி சிங்களர்களுக்கு இணையாக கண்ணியமாக வாழ வகை செய்யும் வரையில்; அனைத்து குடியுரிமைகளையும் தமிழர்கள் பெறும் வரையில்; மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடையை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, இந்திய அரசை கேட்டுக் கொள்கிறது.” இந்தத் தீர்மானத்தின் மீது அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் பேசிய பிறகு இது பற்றிய எனது கருத்துக்களை மேலும் எடுத்துரைக்கிறேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன். ****** பதிலுரை இலங்கை நாட்டிற்கு பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்து விடுதலை கிடைத்துவிட்டாலும் அங்கு வாழும் தமிழர்கள், தங்கள் சொந்த நாட்டிலேயே இரண்டாம் தர குடிமக்களாக கருதப்பட்டனர். இதனையடுத்து, தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசின் அடக்குமுறைகளை எதிர்த்தும் “சுயாட்சி அந்தஸ்து”, “தனி ஈழம்” உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு உட்பட பல்வேறு தமிழ் அமைப்புகள் 1980-களில் இருந்து தொடர்ந்து குரல் எழுப்பி போராடியதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உட்பட தமிழ்நாட்டில் உள்ள அத்தனை அரசியல் கட்சிகளும், தமிழக மக்களும், இலங்கைத் தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதிலும், அவர்களுக்கு சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்பதிலும் மிகுந்த விருப்பம் கொண்டிருந்தார்கள். இது மட்டுமல்லாமல், அவர்களுக்கு தங்களுடைய தார்மீக ஆதரவினையும் அளித்தனர். இந்தச் சூழ்நிலையில், தமிழீழம் என்ற போர்வையில் தீவிரவாதம் தலைதூக்க ஆரம்பித்து இதன் காரணமாக தமிழ்ச் சகோதரர்களே படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள் எல்லாம், நடந்தேறின. இதன் உச்சகட்டமாக இந்திய நாட்டின் பாதுகாப்பிற்கும், இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் ஊறு விளைவிக்கும் வகையில், முன்னாள் பாரதப் பிரதமர் திரு. ராஜீவ் காந்தி அவர்கள், விடுதலைப் புலிகள் அமைப்பினரால் 1991 ஆம் ஆண்டு தமிழ் மண்ணில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து, விடுதலைப் புலிகள் அமைப்பின் மீது இருந்த அனுதாபம் கடுமையான எதிர்ப்பாக மாறிவிட்டது. 1992-ஆம் ஆண்டு நான் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த போது என்னுடைய வற்புறுத்தலின் பேரில் விடுதலைப் புலிகள் இயக்கத்தை 1967 ஆம் ஆண்டு சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் மத்திய அரசு தடை செய்து, அந்தத் தடை உத்தரவு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நீட்டிக்கப்பட்டு வருகிறது. இது மட்டுமல்லாமல், முன்னாள் பாரதப் பிரதமர் திரு. ராஜீவ் காந்தி கொலையில் முதல் குற்றவாளி பிரபாகரனை உடனடியாக இலங்கை அரசு கைது செய்து இந்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், தடை செய்யப்பட்ட இயக்கத்தைச் சார்ந்த எவரையும் இந்தியாவிற்குள் நுழைய அனுமதிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி 2002-ஆம் ஆண்டு இந்தச் சட்டமன்றப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 2005-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இலங்கை அரசின் அதிபராக திரு. மஹிந்தா ராஜபக்ஷே பொறுப்பேற்றுக் கொண்டார். 2006-ஆம் ஆண்டு மே மாதத்தில் தமிழகத்திலும் துரதிர்ஷ்டவசமாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. மைனாரிட்டி தி.மு.க. அரசிற்கு திரு. மு. கருணாநிதி தலைமை வகித்தார். மத்தியிலும் தி.மு.க. அங்கம் வகிக்கும் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி 2004-முதல் நடைபெற்று வருகிறது. இந்தச் சூழ்நிலையில், இலங்கையில் அமைதியை ஏற்படுத்தும் போர்வையில் தமிழர்கள் மீதான அடக்குமுறைகளை இலங்கை அரசு கட்டவிழ்த்துவிட ஆரம்பித்தது. 2008-ஆம் ஆண்டு துவக்கத்தில் இலங்கை ராணுவத்தினர் 100 பேருக்கு அரியானா மாநிலத்தில் இந்திய ராணுவம் ரகசியமான முறையில் போர் பயிற்சி அளித்ததாகவும்; இலங்கை ராணுவத்தினருக்கு அதிநவீன ரேடார் கருவிகள் உட்பட பல்வேறு வகையான ஆயுதங்களை இந்திய அரசு வழங்கியதாகவும்; இந்திய ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் சிலர் இலங்கை சென்று வந்ததாகவும் அப்போது ஊடகங்களில் செய்திகள் வந்தன. அப்போது முதலமைச்சராக இருந்த திரு. கருணாநிதிக்கு இவை அனைத்தும் நன்கு தெரிந்திருக்கும். இந்தியாவிடமிருந்து தனக்குத் தேவையான ராணுவ உதவிகளைப் பெற்றுக் கொண்ட இலங்கை ராணுவம் 2008-ஆம் ஆண்டு இறுதியிலும், 2009-ஆம் ஆண்டு துவக்கத்திலும், இலங்கைத் தமிழர்களை கடுமையாக தாக்க ஆரம்பித்தது. இலங்கையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த இலங்கை அரசை மத்திய அரசு நிர்ப்பந்திக்க வேண்டும் என மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.க. வலியுறுத்த வேண்டும் என்றும்; இதற்கு காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு செவி சாய்க்கவில்லையெனில் மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவினை தி.மு.க. விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும் நான் பல முறை வற்புறுத்தினேன். ஆனால், அப்போது மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சராக இருந்த கருணாநிதியோ, அதைச் செய்யவில்லை. மாறாக, “அனைத்துக் கட்சிக் கூட்டம்”, “சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டம்”; “தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தீர்மானம்”, “மனிதச் சங்கிலி போராட்டம்” “பிரதமருக்கு தந்தி”; “நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா என்ற அறிவிப்பு”; “ராஜினாமா கடிதங்களை தானே பெற்றுக் கொண்டது”; “இறுதி எச்சரிக்கை என்ற அறிவிப்பு” என பல்வேறு வகையான நாடகங்கள் தான் முன்னாள் முதலமைச்சர் திரு. கருணாநிதியால் நடத்தப்பட்டன. இவற்றின் உச்சகட்டமாக, காலை சிற்றுண்டியை வீட்டில் முடித்துவிட்டு தலைமைச் செயலகம் செல்லும் வழியில் திடீரென்று “போர் நிறுத்தம் ஏற்படும் வரை உண்ணாவிரதம்” என்று அறிவித்து கடற்கரையில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ள ஆரம்பித்தார் முன்னாள் முதலமைச்சர் திரு. கருணாநிதி. மதிய உணவு வேளை வந்தவுடன் நண்பகல் 12 மணி அளவில் “விடுதலைப் புலிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை இலங்கை அரசு முடித்துக் கொண்டுவிட்டது” என்ற செய்தியை ஊடகங்களுக்கு அறிவித்துவிட்டு தன்னுடைய உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டு விட்டார். இதன் மூலம் “உண்ணாவிரதம்” என்னும் அறப் போராட்டத்தை கேலிக் கூத்தாக்கிவிட்டார் முன்னாள் முதலமைச்சர். “போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டது” என்ற முன்னாள் முதலமைச்சர் திரு. கருணாநிதியின் பேச்சைக் கேட்டு பாதுகாப்பாக பதுங்குக் குழிகளில் பதுங்கியிருந்த லட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் வெளி வந்தனர். இவ்வாறு வெளிவந்த அப்பாவி இலங்கைத் தமிழர்கள் மீது இலங்கை ராணுவத்தினர் கொத்து கொத்தாக இடைவிடாது குண்டுகளை வீசி அவர்களை ஈவு இரக்கமின்றி படுகொலை செய்தனர். இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் இலங்கை ராணுவ முகாம்களில் கம்பிகளால் ஆன வேலிகளுக்கு பின்னால் அடைத்து வைக்கப்பட்டதாகவும்; முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழ்ப் பெண்கள் இலங்கை ராணுவப் படையினரின் கண் முன்னேயே பொது இடங்களில் இயற்கை உபாதைகளை கழிக்கக் கூடிய நிலைமைக்கும், குளிக்கக் கூடிய நிலைமைக்கும் ஆளாக்கப்பட்டதாகவும்; தமிழர்கள் குடியிருந்த பகுதிகளில் எல்லாம் சிங்களர்கள் குடியேறி இருப்பதாகவும் செய்திகள் வந்தன. ஆனால், கனிமொழி உட்பட ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் இலங்கை சென்று இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுடன் சிரித்துப் பேசி; விருந்துண்டு; பரிசுப் பொருட்களை பெற்று சென்னை திரும்பிய நாடாளுமன்றக் குழுவோ, “இலங்கைத் தமிழர்கள் எல்லோரும் நலமாக இருக்கிறார்கள்” என்று ஒரு உண்மைக்கு மாறான தகவலை வெளியிட்டது. உண்மை நிலை என்னவென்றால், போரினால் இடம் பெயர்ந்த தமிழர்கள் மறுவாழ்வு பெறாமல் இன்னமும் அவதிப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள். “போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டது” என்ற உண்மைக்கு மாறான தகவலைக் கூறி இலங்கைத் தமிழர்களை இலங்கை ராணுவத்திடம் காட்டிக் கொடுத்துவிட்டார் முன்னாள் முதலமைச்சர் திரு. கருணாநிதி. "தமிழினப் பாதுகாவலர்" என்று தன்னைத் தானே சொல்லிக் கொண்டு “தமிழினப் படுகொலை”-க்கு துணை போயிருப்பதை பார்க்கும் போது “உறவு போல் இருந்து குளவி போல் கொட்டுவது” என்னும் பழமொழி தான் நினைவிற்கு வருகிறது. இவற்றை எல்லாம் நான் இங்கே சுட்டிக் காட்டுவதற்குக் காரணம் முன்னாள் முதலமைச்சரை குற்றம் சாட்ட வேண்டும்; முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசை குறை சொல்ல வேண்டும் என்பதற்காக அல்ல. அப்பாவி இலங்கைத் தமிழர்கள் உயிர் இழப்பதற்கு முந்தைய அரசு காரணமாக அமைந்துவிட்டதே என்ற ஆற்றாமையால் தான் இவற்றை நான் இங்கே குறிப்பிடுகிறேன். முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசின் சுயநலப் போக்கு மற்றும் கையாலாகாத்தனம் காரணமாக பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் இலங்கை ராணுவத்தின் குண்டு மழைக்கு பலியாகி இருக்கிறார்கள்; குண்டு மழைக்கு விலக்களிக்கப்பட்ட பகுதி மற்றும் மருத்துவமனைகள் மீதெல்லாம் இலங்கை ராணுவம் குண்டுமழை பொழிந்து இருக்கிறது; மனிதாபிமான அடிப்படையில் நிவாரணப் பொருட்கள் மக்களை சென்றடைவதை இலங்கை அரசு தடுத்து நிறுத்தி இருக்கிறது; உணவு மற்றும் குடிநீர் பற்றாக்குறை காரணமாக ஏராளமான தமிழர்கள் மரணமடைந்துள்ளனர்; மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்துள்ளன. இந்தக் காரணங்களுக்காகத்தான் இந்தத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இங்கே பேசிய மாண்புமிகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் திரு. சௌந்தரராஜன் அவர்கள், பொருளாதாரத் தடையைக் கொண்டு வர வேண்டுமென்ற வரிகளை விலக்கிக் கொண்டால் என்ன என்ற ஒரு கருத்தை இங்கே தெரிவித்தார். இதனால் அப்பாவித் தமிழ் மக்களும் பாதிக்கப்படுவார்களே என்ற ஒரு கருத்தைச் சொன்னார். இப்போதே இலங்கை அரசு யாருக்கும் பணியவில்லை. அங்கே வாழ்கின்ற இலங்கைத் தமிழர்களுக்கு சிங்களர்களோடு அனைத்து உரிமைகளையும், குடியுரிமைகளையும் வழங்க வேண்டுமென்று இந்தியா சொன்னாலும், யார் சொன்னாலும், அவர்கள் அதை மதிக்கவில்லை. அதனால், அவர்களை எப்படி வழிக்குக் கொண்டு வருவது, அவர்களை வழிக்குக் கொண்டு வருவதற்கு ஒரே வழி பொருளாதாரத் தடைகள்தான். இதுவொரு தற்காலிகமான ஒரு முறைதான். இந்திய அரசும், இன்னும் சில நாடுகளும் இணைந்து, இலங்கை அரசின்மீது ஒரு பொருளாதாரத் தடையைக் கொண்டு வந்தால், குறுகிய காலத்திற்குள்ளேயே நாம் சொல்வதை இலங்கை அரசு கேட்டுத்தான் ஆக வேண்டுமென்ற நிர்ப்பந்தம் ஏற்படும். வேறு வழியில்லை என்பதற்காகத்தான் இதைச் சேர்த்திருக்கிறோம். இந்தத் தீர்மானத்தின்மீது இங்கே கருத்துத் தெரிவித்து பேசிய இன்னும் சில மாண்புமிகு உறுப்பினர்கள் பேசுகின்றபோது, ஐ.நா. சபை ராஜபக்ஷேவை போர்க் குற்றவாளி என்று அறிவித்து விட்டதாக இங்கே தெரிவித்தார்கள். அப்படியில்லை. ஐ.நா. சபையின் பொதுச் செயலாளர் திரு. பான் கீ மூன் அவர்கள் ஒரு குழுவை அமைத்து, அவர்கள் அங்கே நிகழ்த்தப்பட்ட போர்க் குற்றங்களைப் பற்றி ஒரு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென்று தெரிவித்தார். அந்தக் குழு சமர்ப்பித்த அறிக்கையில், இப்படிப்பட்ட போர்க் குற்றங்களெல்லாம் நிகழ்த்தப்பட்டதாகக் கூறப்படுகிறது; அங்கே வாழ்கின்ற தமிழ் மக்கள் மீது இத்தகைய குற்றங்களெல்லாம், கொடுமைகளெல்லாம் நிகழ்த்தப்பட்டன என்பதையெல்லாம் தெரிவித்துவிட்டு, இதனை இலங்கை அரசே விசாரிக்க வேண்டும் என்றுதான் சொல்லியிருக்கிறார்களே தவிர, இதை உறுதியும் செய்யவில்லை – ராஜபக்ஷேவோ, மற்றவர்களோ போர்க் குற்றவாளிகள் என்று ஐ.நா. சபை அறிவிக்கவும் இல்லை. அதனால்தான் இந்தத் தீர்மானத்தில் இந்திய அரசு போர்க் குற்றம் புரிந்தவர்களை, போர்க் குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த வேண்டும், இதற்கு ஐ.நா. சபையை வலியுறுத்த வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்திருக்கிறோம். எனவே, மனிதாபிமானமற்ற முறையில் ஈவு இரக்கமின்றி பல்லாயிரக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்படுவதற்குக் காரணமானவர்களை போர்க் குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வற்புறுத்த வேண்டும் என்றும்; இலங்கையில் உள்ள அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு முழு மறுவாழ்வு அளித்து, அவர்கள் வசித்த இடங்களிலேயே அவர்களை மீண்டும் குடியமர்த்தி; சிங்களர்களுக்கு உரிய அனைத்து குடியுரிமைகளையும் தமிழர்களுக்கு இலங்கை அரசு வழங்கும் வரையில் மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசு மீது பொருளாதாரத் தடையை விதிக்க வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி, அரசு சார்பில், என்னால் முன்மொழியப்பட்ட தீர்மானத்தினை இந்த மாமன்றம் ஒரு மனதாக நிறைவேற்றித் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

LinkWithin

Related Posts with Thumbnails