maveerar naal nov 27 2010 rudrakumaran arikkai



இன்று மாவீரர் நாள்! தமது வீரத்தாலும் ஈகத்தாலும் இலட்சிய உறுதியாலும் தமிழீழ தேசத்தின் விடுதலைக்காய் களமாடி நம்தேசத்தின் மீது விதையாய்ப் பரவிநிற்கும் நமது மாவீரர்களை உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் மதிப்பளித்து வணங்கி நிற்கும் நாள்!
ஈழத் தமிழர் தேசத்தை, இத் தேசத்தின் விடுதலை வேட்கையை, இத் தேச மக்களின் வீரமிகு விடுதலைப்போராட்டத்தை உலகப்பந்தின் அனைத்து மூலைகளிலும் நிலைநிறுத்திச் சென்ற நம் வீரமறவர்களின் நினைவேந்தி, தமிழீழ விடுதலை என்ற இலட்சியத்தை நமக்குள் இன்னும் உறுதியாக நாம் உரமேற்றிக் கொள்ளும் நாள்.

இப் புனித நாளில், உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுடன் இணைந்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் நமது மாவீர்களுக்கு தனது வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
நமது மாவீர்களின் ஈகமே தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் உயிர்நாடியாக இருந்து விடுதலைத் தணலை நமது நெஞ்சமெல்லாம் நிறைத்து நிற்கிறது. போராட்டத்தின் அடித்தளமாக இருந்து நம்மை வழிநடாத்தி வருகிறது. இம் மாவீரர்களின் ஈகம் ஒருபோதும் வீண்போகப் போவதில்லை. இவ் ஈகச்சுடரொளி நமது தேசம் விடுதலை அடைந்த செய்தியினை என்றோ ஒருநாள் உலகெங்கிலும் பரவச் செய்து நிற்கும் என்பது திண்ணம்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மாவீரர்களின் கனவுகளை நனவாக்கப் பிறந்த ஒரு குழந்தை. இக் குழந்தையின் பெற்றோர்கள் நமது மாவீரர்களே. மாவீரர்கள் ஈழத்தமிழ் மண்ணில் வாழ்ந்த வாழ்வின் நினைவுகளையும், அவர்களது வீரச்சாவு நமக்குக் கூறும் செய்திகளின் கனதியினையும் நன்கு புரிந்துகொண்டுதான் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அனைத்துலகப்பரப்பில் தனது ஒவ்வொரு காலடியையும் எடுத்து வைக்கிறது. நாம் முன்னோக்கி வைக்கும் ஒவ்வொரு காலடியும் மாவீர்கள் எந்த இலட்சியத்துக்காகப் போராடினார்களோ அந்த இலட்சியத்தை நோக்கியதாகவே அமையும். மாவீரர் தமது குருதி சிந்திய அந்தத் தமிழீழத் தாயக மண்ணில் நமக்கென்றொரு தமிழீழத் தனியரசினை அமைக்கும்வரை நமது முன்னோக்கிய பயணம் என்றும் ஓயப்போவதில்லை.

இலங்கைத்தீவில், ஈழத் தமிழர் தாயகப்பூமியில், தமிழர்களுக்கென்ற ஒரு தனிநாடு உருவாகுவதனைத்தவிர ஈழத்தமிழர் தேசத்தின் தேசிய இனச்சிக்கலுக்கு வேறு எந்தத்தீர்வும் அமையப்போவதில்லை. சிறீலங்கா அரசின் கீழ் ஈழத்தமிழ் மக்கள் சமத்துவமாகவும் கௌரவமாகவும் பாதுகாப்பாகவும் வாழ்வது என்பது என்றுமே சாத்தியமாக முடியாத ஒரு பகற்கனவு. முழுக்க முழுக்க ஒரு சிங்கள பௌத்த தேசமாக, - சிங்கள இராணுவம், சிங்கள சிவில் நிர்வாகம், சிங்கள தேசத்தின் நலன்பேணும் நீதித்துறை- இவற்றின் துணையுடன் பெரும்பான்மையினரின் அரசியல் முடிவுகளை ஈழத் தமிழ் தேசத்தின் மீதும் ஏனைய மக்கள் மீதும் ஏவிவிடும்- அநீதியும், அதர்மமும் புரியும் சிங்கள ஆட்சியாளர்களிடமிருந்து ஈழத்தமிழ் தேசம் நீதியினை எதிர்பார்க்க முடியாது.

நீதியின் அடிப்படையில் அமையாத வாழ்வு ஒரு அடிமை வாழ்வு. இவ் அடிமை வாழ்வினையே இன்று நமது தாயக மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களது அரசியல் உணர்வு அடக்குமுறைச்சட்டங்களாலும், இராணுவ அச்சுறுத்தல்களாலும் நசுக்கப் பட்டிருக்கிறது. தங்கள் சொந்த நிலங்களில் குடியமர்ந்து வாழும் உரிமை நமது மக்களுக்குத் தொடர்ந்தும் மறுக்கப்பட்டு வருகிறது. நமது தேசத்தின் விடுதலைக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த தமது சொந்தப்பிள்ளைகளின், சகோதரர்களின், பெற்றோர்களின் நினைவாய் சுடரேற்றி வணக்கம் செலுத்தும் அந்த அடிப்படை உரிமைகூட நமது மக்களிடம் இருந்து பறிக்கப்பட்டிருக்கிறது. இந்தவகையில் நமது மக்கள் தமக்கான அரசியல் வெளி மட்டுமல்ல ஆன்மீக வெளி;யும் மறுக்கப்பட்ட மக்களாகவே தாயக மண்ணில்; வாழ்ந்து வருகின்றனர்.

நமது மாவீரர்கள் நினைவாக அமைக்கப்பட்டிருந்த துயிலும் இல்லங்கள் நினைவுத்தூபிகள், சின்னங்கள் போன்றவற்றை சிங்கள ஆட்சியாளர்கள் அனைத்துலக நடைமுறைகளுக்கு முரணாகச் சிதைத்துத் துவம்சம் செய்திருக்கின்றனர். இச்செயல் தமிழ் மக்களுக்கெதிரான சிறீலங்கா அரசின் இனஅழிப்பின் ஓர் அங்கம் என நாம் குற்றம் சுமத்துகிறோம். நமக்குக் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பினையும் பயன்படுத்தி சிங்கள அரசின் இக் குற்றத்தையும் ஏனைய இனஅழிப்பு குற்றங்களையும் புரிந்தவர்களைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றவென உலகின் மனச் சாட்சியின் முன் நாம் ஓங்கிக் குரல் எழுப்புவோம்.

மாவீரர் கனவாகிய சுதந்திரத் தமிழீழத்தை அமைப்பதற்குத் தற்போது நாம் தேர்ந்தெடுத்திருக்கும் பாதை அரசியல் இராஜதந்திர வழிகள் தழுவியது. இவ் வழிவகை மூலம் தழிழீழ இலட்சியத்தை வென்றடைதல் சாத்தியமானதுதானா என்ற கேள்வி பலர் மனதில் எழுவதனையும் நாம் அறிவோம். தமிழீழம் தொடர்பான எமது நிலைப்பாடு எமது விருப்பங்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டதல்ல. தமிழீழம் என்ற சுதந்திரமும் இறைமையும் கொண்ட ஒரு நாட்டினை நமக்கென நாம் அமைக்காது விட்டால் காலப்போக்கில் இலங்கைத்தீவில் ஈழத் தமிழ் மக்கள் ஒரு தேசமாக வாழ்ந்தமைக்கான அடையாளங்களே அழிந்து போகக்கூடிய ஆபத்தினை நாம் இன்று எதிர் கொண்டுள்ளோம். ஈழத் தமிழ் தேசத்தை இயலக் கூடிய அளவு விரைவாக விழுங்கி விடுவதற்கு சிங்கள இனவாதப்பூதம் துடித்துக் கொண்டிருக்கிறது. இப்பூதத்தின் தொண்டையினைத் திருகி, இம் முயற்சியினை இதுவரைகாலமும் தடுத்து நிறுத்தியவர்கள் நமது மாவீர்களே. தற்போதைய சூழலில் தனது இராணுவ ஆதிக்கநிலையில் இருந்தவாறு ஈழத் தமிழர் தேசத்தினை விழுங்கும்; முயற்சிகளை சிங்களம் பெரிதும் தீவிரப்படுத்தியுள்ளது. இந் நிலையில் தமிழீழம் என்ற தனிநாடு ஈழத் தமிழர் தேசத்தின் வாழ்வுக்கும் பாதுகாப்புக்கும் தவிர்க்க முடியாத ஒரு தேவையாகவே அமைகின்றது.

சிங்களத்தின் இன்றைய முயற்சியினைத் தடுத்து நிறுத்தி தமிழீழ இலட்சியம் குறித்து நாம் முன்னேறுவது எவ்வாறு? இதற்கான விய+கங்கள்தான் என்ன? நமது மாவீரர்களின் வீரம் செறிந்த போராட்டத்தைச் சிங்கள தேசம் தனித்து எதிர்கொள்ளவில்லை என்ற உண்மையினை நாம் கவனத்துக்கு எடுத்தாக வேண்டும். சிங்கள தேசம் தனது நலன்களையும் உலக சக்திகளின் நலன்களையும் நேர்கோட்டில் இணைய வைத்து, உலக நாடுகளைத் தன்பக்கம் அரவணைத்துத்தான் தனது ஆக்கிரமிப்புப் போரினை நடாத்தியது. இலங்கைத்தீவு இரண்டாகப்பிரியக்கூடாது என்ற பிராந்திய மற்றும் உலக சக்திகளின் நிலைப்பாடுதான் சிங்களத்தின் விய+கங்களுக்கு வாய்ப்பான சூழலைக் கொடுத்தது. இயங்கிக் கொண்டிருக்கும் உலகில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கும். உலக ஒழுங்கும், பிராந்திய மற்றும் உலக சக்திகளின் புவிசார் அரசியலும் ஒரே சமன்பாட்டில் எக்காலமும் இயங்குவதில்லை. இலங்கைத்தீவு இரண்டாகப் பிரியக்கூடாது என்ற இன்றைய நிலைப்பாடு மாறி இலங்கைத்தீவில் இரு நாடுகள் உருவாகுவதனை பிராந்திய மற்றும் உலக சத்திகள் விரும்பும் சூழல் உருவாகக்கூடிய வாய்ப்புக்களுக்கும் வரலாற்றில் இடம் உண்டு. உலகில் இடம்பெறும் மாற்றங்களை உன்னிப்பாக அவதானித்து, ஈழதேசத்தின் நலன்களையும் உலக சக்திகளின் நலன்களையும் இணைய வைக்கக்கூடிய ஒரு சூழலை உரிய வரலாற்றுக் கட்டத்தில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தால் உருவாக்க முடியுமென நாம் திடமாக நம்புகிறோம்.

தமிழீழம் என்ற நமது தாயகம் நோக்கிய பயணத்தில் தமிழீழத் தாயகம் அமைந்திருக்கும் பகுதியின் புவிசார் அரசியல் முக்கியத்துவம், தாயக மக்களின் தளராத விடுதலை உணர்வு, தென்னாசியப் பிராந்தியத்தில் தமிழரின் பலம், உலக அரங்கில் புலம்பெயர் தமிழ் மக்கள் ஏற்படுத்தக்கூடிய அரசியல் அதிர்வுகள் போன்றவை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவையாகவே அமைகின்றன. தென்னாசியப் பிராந்தியத்தில் தமிழீழ தாயகப்பகுதியின்; முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்ட சிங்களம் இப்பகுதியினை சிங்களமயமாக்கி எம்மிடமிருந்து பறித்துவிட முயல்கிறது. தாயக மக்களின் விடுதலை உணர்வினை இராணுவ அடக்குமுறைகளின் ஊடாகவும் சிங்களத்தின் ஆதிக்கத்தை நிறுவும் மேம்பாட்டுத் திட்டங்களின் ஊடாகவும் நசுக்கி விட முயல்கிறது. தென்னாசியப் பிராந்தியத்தில் தமிழரின் பலம் தமிழக மக்களின் கைகளிலேயே பெரிதும் தங்கியுள்ளது. இதற்கேற்ற வகையில் புலம் பெயர்ந்த மக்களின் அரசியல் முயற்சிகளை நாம் தெளிவான திசையில் நகர்த்த வேண்டியுள்ளது.

இவற்றையெல்லாம் கவனத்திற் கொண்டு தமிழீழ விடுதலைப்போராட்டத்தை ஈழத் தமிழ் மக்களின் போராட்டமாக மட்டுமன்றி, எண்பது மில்லியன் மக்கள் பலத்தைக் கொண்ட உலகத் தமிழ் மக்களின் போராட்டமாக, குறிப்பாக தமிழக மக்களின் பரந்துபட்ட பங்களிப்புடன் முன்னோக்கி நகர்த்துவது அவசியமானதென நாம் கருதுகிறோம். இதற்குக் கட்சி பேதங்கள் கடந்த நிலையில் தமிழக மக்கள் அனைவரும் தமிழீழ விடுதலைப்போராட்டத்துடன் தம்மை இணைத்துக் கொள்ள வேண்டிய ஒரு வரலாற்றுக் கட்டத்தில் நாம் இருக்கிறோம். ஈழத் தாயகத்தில் வாழும் தமிழ் மக்களின் வாழ்வும் பாதுகாப்பும் தமிழக மக்களின் கைகளில் பெரிதும் தங்கியுள்ளது என்பதனையும் தமிழக மக்களதும் அரசியல் தலைவர்களதும் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறோம்.
இன்றைய நிலையிலிருந்து முன்னோக்கி நகர இரு விடயங்களில் கொள்கைவழி நிலைப்பாடு முக்கியமானது எனவும் நாம் கருதுகிறோம்.

1. உலக நாடுகளுடன் உறவுகளை வளர்த்துக் கொள்ளும்வகையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கையினை வகுத்தல்.

2. சிறீலங்காவின் அரசியல் சூழ்ச்சிகட்குள் சிக்கிக் கொள்ளாது, தாயக மக்களின் வாழ்க்கையினை மேம்படுத்தும் வகையிலான தாயகம் நோக்கிய பொருளாதார சமூக மேம்பாட்டுக் கொள்கையினை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தனக்கென வடிவமைத்தல்.

இக் கொள்கைகளை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் மட்டும் தீர்மானிக்கும் வகையிலில்லாமல் உலகெங்கும் வாழும் எண்பது மில்லியன் தமிழ் மக்களின் பங்கு பற்றலுடன், அவர்களின் கருத்துக்களையும் உள்வாங்கும் வகையிலான ஏற்பாடுகளைச் செய்து வருகிறோம். இது குறித்த விபரங்களை மக்களுக்கு விரைவில் அறியத் தருவோம்.

இக் கொள்கைவழி நிலைப்பாட்டு ஏற்பாடுகளை விட நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஒவ்வொரு அமைச்சுக்களும் தத்தமது செயற்திட்டங்களையும் வகுத்து வருகின்றனர். மாவீரர், முன்னாள் போராளிகள் நலன் பேணும் அமைச்சு மாவீரர்நினைவாக மேற்கொள்ளப்படும் செயற்திட்டங்களாக மாவீரர், முன்னாள் போராளிகள் குடும்ப நலன் பேணும் அறக்கட்டளை, மாவீரர் நினைவில்லம், இணையவழி மாவீரர் துயிலும் இல்லம் ஆகியவற்றை மாவீரர் நாளாகிய இன்று அறிவிக்கின்றது. ஏனைய அமைச்சுக்களும் தமது செயற்திட்டங்களை விரைவில் அறிவிப்பார்கள். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை உலகப்பரப்பில் எண்பது மில்லியன் உலகத் தமிழ் மக்களின் ஆதரவுடன் ஒரு வலுமையமாக உருவாக்குவது தமிழீழம் நோக்கிய நமது பயணத்துக்கு அடிப்படையானது.

தாயகத்தில் சிறீலங்கா அரசின் கொடுமையான அடக்குமுறைகளுக்கு மத்தியிலும் வாய்ப்புக்கள் கிடைக்கும் போதெல்லாம் தாயக மக்கள் தமது உணர்வுகளை வெளிப்படுத்தி, சிறீலங்கா அரசினை அம்;பலப்படுத்தி வருகிறார்கள். தாயகத் தமிழ்த் தலைவர்கள் கோரிநிற்பது போல, ஈழத் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வினை சிறீலங்கா அரசு ஒரு போதும் முன்வைக்கப் போவதில்லை. அடக்குமுறை வாழ்வுக்கெதிராக, தமிழர் தாயகத்தினை சிங்களமயப்படுத்துவதற்கெதிராக தாயக மக்களின் எதிர்ப்பு வெவ்வேறு வடிவங்களில் பலம் பெறுவது தவிர்க்கமுடியாத வரலாற்றுப்போக்காக அமையும். தமிழீழம் என்ற தனியரசிற்கான தார்மீக நியாயங்களை தாயகச்சூழல் உலகத்துக்கு மிகத் தெளிவாக எடுத்துரைக்கும்.

எமது வணக்கத்துக்கும் அன்புக்குமுரிய மாவீரர்களின் பெற்றோர்களே, உடன்பிறப்புக்களே, குடும்பத்தினரே! தேசத்தின் விடியலுக்காக வித்தாகிவிட்ட உங்கள் அன்புக்குரியவர்கள் செய்த ஈகம் அளப்பரியது. காலத்தால் மறக்கமுடியாதது. அவர்களின் மறைவு உங்களுக்கு ஏற்படுத்திய பிரிவுத்துயரினை எங்களால் ஈடுசெய்யமுடியாது. எனினும் அவர்களின் இழப்பினால் உங்கள் எதிர்காலம் இருண்டுபோவதனை நாங்கள் அனுமதிக்கமுடியாது. உங்களின் நலனும் பாதுகாப்பான வாழ்வும் செழுமைமிக்க எதிர்காலமும் எங்களது முதன்மையான கடமைகளில் ஒன்றாகவேயுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் அதன் பின்புலமாக உள்ள பலலட்சம் புலம்பெயர் தமிழ் மக்களும் உங்களது மகிழ்ச்சிக்காய் மாண்புமிகு வாழ்வுக்காய் பலமாகவும் பின்புலமாகவும் நின்று உழைப்போம் என இன்றைய நாளில் உறுதிகூறுகின்றோம்.

ஊரெல்லாம்கூடித் தேர் இழுப்பது போல் உலகத் தமிழ் மக்கள் நாம் அனைவரும் ஒன்றிணைந்து தமிழீழத் தேசமென்ற தேரினை இழுப்போமானால் நமது வெற்றியை தடுத்து நிறுத்த எந்தச் சக்திகளாலும் முடியாது. இதற்கான ஆன்மபலத்தை மாவீரர்கள் நமக்கு வழங்கிக் கொண்டிருப்பார்கள். நமது மாவீரர்களின் கனவான தமிழீழத் தாயகத்தினை சுதந்திரநாடாக வெற்றிகொள்ளும் வரை நாம் அயராது உழைப்போம் என இன்றைய நாளில் அந்த உன்னத மாவீரர்களின் நினைவுடன் உறுதியெடுத்துக் கொள்வோமாக!

விசுவநாதன் ருத்திரகுமாரன்
பிரதமர்
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts with Thumbnails