ஒவ்வொரு தமிழனும் படிக்க வேண்டிய ஆவணநூல் சென்னையில் வெளியீடு
சிறிலங்கா அரச பயங்கரவாதத்தினை உலகுக்கு எடுத்துரைக்கும் தமிழ் இனப் படுகொலைகள் பற்றிய விபரம் அடங்கிய ஆவணப் புத்தகத்தின் வெளியீடு இன்று (24-12-09) மாலை சென்னையில் வெளியிடப்பட்டது.

1956 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் சிறிலங்கா அரசால் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைகளின் விபரங்கள் அடங்கிய ‘தமிழினப் படுகொலைகள் : 1956 - 2008’ என்ற தலைப்பில் புத்தகமாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
சென்னை நகரின் மத்தியில் அமைந்துள்ள தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் இன்று மாலை 6 மணிக்கு இடம்பெற்ற நிகழ்வில் தமிழக முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் புலவர் புலமைப்பித்தன் புத்தகத்தை வெளியிட்டு வைத்தார்.
தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் பதிப்பிக்கப்பட்ட இரு புத்தகங்களும் வெளிடப்பட்டன. சென்னையைச் சேர்ந்த 'மனிதம் அமைப்பு' புத்தகத்தை பதிப்பித்திருந்தது.
கிளிநொச்சியில் இருந்து செயற்பட்ட வடக்கு-கிழக்கு மனித உரிமைகள் செயலகத்தினால் சேகரிக்கப்பட்டுத் தயாரிக்கப்பட்ட ஆவணங்களே தொகுக்கப்பட்டு புத்தகமாக்கப்பட்டுள்ளன.
புத்தக வெளியீட்டு நிகழ்வில் சென்னை உயர் நீதிமன்ற சட்டவாளர் அமைப்பின் தலைவர் பால் கனகராஜ், பி.யூ.சி.எல். மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் சட்டவாளர் திருமதி சுதா ராமலிங்கம், ‘தி வீக்’ ஆங்கில வார ஏட்டைச் சேர்ந்த ஊடகவியலாளர் திருமதி கவிதா முரளிதரன், ஓவியர் புகழேந்தி, ஈழ ஆர்வலர்கள் ஜனார்த்தனன், கிருபானந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.
“இந்தப் புத்தகத்தில் 150 படுகொலைகள் பற்றிய விபரங்கள் இருக்கின்றன. அவற்றில் நான்கைந்தைப் படித்தாலேயே ஈழத்தில் இளைஞர்கள் ஏன் ஆயுதம் ஏந்தினார்கள் என்பதை ஒவ்வொருவரும் புரிந்துகொள்ளலாம்.
ஒவ்வொரு கதைகளும் எமது இரத்தத்தைக் கொதிக்கச் செய்யும் ஆத்திரமுறச் செய்யும். அந்தளவிற்கு அங்கு அரச பயங்கரவாதம் நிகழ்ந்துள்ளது” எனத் தெரிவித்தார் ‘மனிதம்’ மனித உரிமைகள் அமைப்பின் செயல் இயக்குநர் அக்னி சுப்பிரமணியம்.
ஒவ்வொரு தமிழனும் படிக்க வேண்டிய புத்தகம் இது என்றும் அவர் குறிப்பிட்டார்.
தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் இந்த நூல் வெளியிடப்பட்டாலும் மொழிபெயர்ப்பாக அல்லாமல் ஒவ்வொன்றும் அந்தந்த மொழிகளில் தனித் தனியாக எழுதி வெளியிடப்பட்டுள்ளன.
தமிழ்ப் புத்தகத்தில் அதிகளவான விபரங்கள் விரிவாக வழங்கப்பட்டுள்ளதாக அக்னி சுப்ரமணியம் தெரிவித்தார்.
விரைவில் ஜெர்மன், பிரெஞ், இத்தாலி, டச் ஆகிய மொழிகளில் இந்தப் புத்தகத்தை வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.





தமிழன் வெல்வான்.. தமிழீழம் மலரும்..
No comments:
Post a Comment