makkal yeluchi pothu koottam, karuthu urimai kalam



மக்கள் எழுச்சி பொதுக்கூட்டம்.
இடம்:புரசைவாக்கம் தானா தெரு.
நாள்:6-8-2010

கருத்து சுதந்திரத்தை மறுக்காதே!
போர்க் குற்றத்தை மறைக்காதே!



தமிழகத்தின் இன்றைய அரசியல் சூழல் மிகவும் ஆபத்தான ஒரு கட்டத்தை எட்டியுள்ளது . நீண்டகால அரசியல் அனுபவம் கொண்ட தமிழக முதவர் மு.கருணாநிதி அவர்கள் ஐந்தாவது முறையாக தமிழக முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் ஆட்சி இது. கடந்த காலங்களில் அவரது ஆட்சியில் இத்தனை ஒடுக்குமுறைகளையும் ஏதேச்சதிகாரத்தையும் தமிழகம் கண்டதில்லை. அல்லது அவற்றைப் புரிந்து கொள்வதற்கான காலச் சூழல் கனிந்து வரவில்லை. ஆனால் முன்னர் நடந்த கருணாநிதியின் ஆட்சிக்கும் இந்த முறை நடக்கும் கருணாநிதியின் ஆட்சிக்கும் ஒரு வித்தியாசம் துல்லியமாகத் தெரிகிறது.

தனது விருப்பங்களுக்கு ஏற்ப தமிழக மக்கள் சிந்திக்க வேண்டும். அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள், ஊடகவியலாளர்கள், சமூகப்பணியாளர்கள், என அனைவருமே தான் விரும்பும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்று இந்த ஆட்சியில் எதிர்ப்பார்க்கிறார்.
ஆனால் எப்போதுமே ஆட்சியாளர்களின் விருப்பங்களுக்கிணங்க மக்கள் நடந்து கொள்ள மாட்டார்கள்.

நடந்து கொள்ளவும் முடியாது கடந்த காலத்தில் ஜெயலலிதா ஆட்சியில் நிலவிய அதே சூழல் இப்போது திமுக ஆட்சியிலும்! ஆசைகளையும் விருப்பங்களையும் தனக்குத் தானே உருவாக்கிக் கொண்ட திரு.மு. கருணாநிதி அதை மீறுகிறவர்கள், விமர்ச்சிக்கிறவர்கள் மீது மிகக் கொடூரமான தாக்குதல்களை அரசு இயந்திரத்தின் மூலம் நிகழ்த்தி வருகிறார்.

இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஒரு விதமான மக்கள் கொதி நிலை உயர்ந்து வருவதை நாம் சமூகத் தளத்தில் காண முடியும் நாடெங்கிலும் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து விட்ட விலைவாசி உயர்வாலும், தனியார் தாராளமயக் கொள்கைகளால் வறுமையில் கோரப்பிடியில் தள்ளப்பட்டுள்ள விவசாயிகளும் மத்திய மாநில அரசுகளின் மீது கடுமையான அதிருப்தி அடைந்துள்ளனர். மக்களின் போதாக்குறையும் அன்றாடத் தேவைகளுக்கான போராட்டமும் சமூகத் தளத்தில் பல் வேறு எதிர்ப்பியங்களாக முகிழ்த்து வருகின்ற நிலையில் வழக்கம் போல அரசு இயந்திரம் அதை ஈவிரக்கமற்ற முறையில் ஒடுக்கி வருவதை நாம் பார்க்கிறோம்.

மக்கள் மீதான ஒடுக்குமுறை

இந்தியாவின் பிற மாநிலங்களில் நடைபெறும் போராட்டங்களை அந்தந்த மாநில அரசுகள் ஒடுக்கின்ற விதமும் அது மக்களிடம் பெருங்கோபமாக உருவாகும் சூழலும் போராடும் சக்திகளுக்கு ஒரு நியாயமான பாதுகாப்பை வழங்கி விடுகிறது

இந்த இடத்தில் இருந்துதான் இன்றைய தமிழகத்தின் சூழலை நாம் விளங்கிக் கொள்ள முயல வேண்டும். அதிகளவான அந்நிய முதலீடுகளைக் கவரும் மாநிலமாக தமிழகம் உருவாகி விட்டதாக தமிழக முதலவர் கருணாநிதியும், துணை முதல்வர் மு,க. ஸ்டாலினும் பெருமைப் பட்டுக் கொள்கிறார்கள். ஆனால் பன்னாட்டு நிறுவனங்களின் மூலதனக் குவிப்பால் உள்ளூர் மக்களின் வசிப்பிடங்கள், விவசாய நிலங்கள், குடியிருப்புகள், புழங்குமிடங்கள் என எல்லாம் அபாகரமான முறையில் பறிக்கப்படுவது குறித்து இந்த அரசு கவலைப்படவே இல்லை. அத்தோடு கூடவே மின்வெட்டு , மானியங்கள் வெட்டு அல்லது குறைப்பு என்று கிராமபுற மக்கள் பல் வேறு நெருக்கடிகளுக்கு ஆளாகி வருகிறார்கள்.

ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் இவர்கள் தன்னெழுச்சியாக வீதிக்கு வந்து ஜனநாயக முறையில் தங்களின் எதிர்ப்பை தெரிவித்தால் கூட தமிழக போலிசாரால் ஈவிரக்கமற்ற முறையில் ஒடுக்கப்படுகிறார்கள். தமிழக காவல்துறை என்பது முதல்வர் கருணாநிதி அவர்களின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கிக் கொண்டிருப்பது என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. மின்வெட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் தமிழகம் முழுக்க சிறிய அளவிலான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டாலும் அவர்களை மோசமான முறையில் அடக்கி வரும் இந்த அரசின் அடக்குமுறைக்கு சிறந்த எடுத்துக்காட்டு ராஜகிரி சம்பவம்.

தஞ்சை, கும்பகோணம் சாலையில் இருக்கிற ராஜகிரி என்னும் கிராமத்தில் சுமார் பத்து மணி நேரம் வரை மின்வெட்டு கடைபிடிக்கப்பட்டிருக்கிறது. பல நாட்களாக சகித்துக் கொண்டிருந்த மக்கள் ஒரு கட்டத்தில் கொதித்துப் போய் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட அவர்களை காட்டுமிராண்டித்தனமாக தாக்கி விரட்டிய போலீசார் சுமார் 250 பேர் மீது ஜாமீனில் வெளிவர இயலாத வழக்கைப் பதிவு செய்துள்ளனர்.

இது குறித்து பாபநாசம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அ.அண்ணாதுரையிடம் கேட்டால் ‘இப்படியான வழக்குகளைப் போட்டால்தான்தான் மக்கள் இனி போராட மாட்டார்கள்‘ என்று தடித்தனமாக பதில் சொல்லி இருக்கிறார். இது ஒரு சின்ன சாம்பிள்தான்தான் கன்னியாகுமரி தொடங்கி செங்கல்பட்டு வரை தமிழக மக்கள் மின்வெட்டால் பெரும் அவதியுறுகிற நிலையில் தொடர்ந்து தமிழக முதல்வர் சப்பைக் கட்டு கட்டும் விதமாக அறிக்கை விடுவதும் அண்டை மாநிலங்களோடு ஒப்பிட்டு தங்களுடைய சீரழிவை நியாயப்படுத்துவதுமான ஒரு மக்கள் விரோதப் போக்கைக் கொண்டிருக்கிறார் கருணாநிதி.

அதிகாலை கைதுகள்,வெள்ளி இரவு கைதுகள் முன்பெல்லாம் பெரிய அரசியவாதிகளை கைது செய்யத்தான் பயன் படுத்துவார்கள் தற்போது அரசினை எதிர்த்து போராடும்,அநீதிகளை தட்டி கேட்கும் அனைவருக்கும் அ(டி)திகாலை கைதுகள் தான்..

இந்த போக்கை பார்த்தால் மக்கள் திருடனை கண்டு பயந்த காலம் போய் காவல் துறையை கண்டு பயப்படும் நிலை தான் தற்போது தமிழகத்தில் உள்ளது என்பது நிதர்சனமான உண்மையாக உள்ளது.

மக்களை காக்க வேண்டிய காவல் துறை மக்களை சூறையாட அனுமதித்தது யார்?

விலைவாசி உயர்வு, மின்வெட்டு, காவிரி, முல்லை அணைப் பிரச்சனை என்று தமிழக விவசாயிகளின் எந்த ஒரு பிரச்சனைக்கும் காத்திரமான ஒரு தீர்வைப் தேடுவதற்குப் பதிலாக பழி போடுவது, வஞ்சம் தீர்ப்பது, அல்லது போலீசை ஏவி அச்சுறுத்துவது என்ற புதிய அணுகுமுறையை கடை பிடிக்கிறார் கருணாநிதி. சென்னை, நகரை அழகுபடுத்தும் திட்டங்கள், செயற்கைத் துறைமுகங்கள், நவீன பூங்காக்கள், கூவம் அழகு படுத்தம் என்று பல்லாயிரம் மக்கள் தங்களின் பூர்வீக வசிப்பிடங்களை விட்டு தூக்கி எறியப்படும் சூழலும் அதிகரித்துள்ளது.

ஊடகங்கள் மீதான அடக்குமுறை

மக்கள் மீதான ஒடுக்குமுறையும், எதிர்ப்பியக்கங்கள் மீதான ஒடுக்குமுறையும் தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து விட்ட சூழல் நமக்கு மினி எமர்ஜென்சியையே நினைவூட்டுகிறது. ஆனால் மக்களோ தங்கள் மீதான இத்தகைய ஒடுக்குமுறைகளை அறிந்துகொள்ள முடியாத மனநிலையில் உள்ளனர். அன்றாடம் தங்களின் வாழ்க்கைப்பாடுகளுக்கே போராடிக் கொண்டிருக்கும் மக்களை இந்த ஒடுக்குமுறைகள் சென்றடைவதில்லை என்பதோடு. அரசின் ஒடுக்குமுறைகளை சமூக ஒழுக்கம் என்னும் பெயரில் அங்கீகரிக்கும் மத்திய தர வர்க்கத்து மனநிலையே பெரும் ஆபத்தான ஒன்றாக உருவாகி இருக்கும் நிலையில் அதை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளும் மாநில அரசு. பல சமையங்களில் மத்திய தர வர்க்கங்களின் மீதும் அடக்குமுறைகளை ஏவுகிறது.

அரசின் இத்தகைய ஏதேச்சதிகாரப் போக்கை கண்டிக்கவோ, தட்டிக்கேட்கவோ முனையும் ஊடகங்கள் ஒன்றிலோ சரி செய்யப்படுகின்றன. அல்லது அச்சுறுத்தப்படுகின்றன. தமிழகத்தின் இன்றைய ஊடகச் சூழல் மிகவும் ஆபத்தான ஒரு கட்டத்தை அடைந்திருக்கிறது. முதல்வர் கருணாநிதி அவர்களின் குடும்பத்தினருக்குள் ஏற்பட்ட கலகத்தில் மதுரை தினகரன் அலுவக ஊழியர்கள் மூன்று பேர் கொல்லப்பட்டனர். அந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட கிரிமினல் குற்றவாளிகள் அனைவரையும் விடுவித்தது நீதிமன்றம். அதற்கு அரசு குற்றவாளிகள் மீது காட்டிய கரிசனமே காரணம் என்று கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. அந்த கொலை வழக்கில் தொடர்புடைய அட்டாக் பாண்டி என்னும் குற்றவாளிக்கு விடுதலையான சில மாதங்களிலேயே வாரியப்பதவி வழங்கப்பட்டது.
அப்போது கருணாநிதியினரின் குழுவினராலேயே சன் குழுமச் செய்தியாளர்கள் தாக்கப்பட்டார்கள்.

ஆனால் இன்று நிலமை வேறு அவர்கள் ஒன்று சேந்து விட்டார்கள். இவர்களின் குடும்பத்திற்குள் வந்த சண்டையால் கொல்லப்பட்டவர்களின் உறவுகளும், அடிவாங்கியவனும் மௌனவலியோடு அழுது கொண்டிருக்க தனக்கு ஒரு குடும்பம் இருப்பதாக வேறு அடிக்கடி பெருமைபட்டுக் கொள்கிறார் கருணாநிதி.

சென்னை உயர்நீதிமன்றத்தில் டாக்டர் அம்பேத்கர் சிலை திறப்பு விழாவுக்கு வந்தார் கருணாநிதி. ஏற்கனவே தங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலும் இழைக்கப்பட்ட அநீதியிலும் வெறுப்படைந்திருந்த வழக்கறிஞர்கள் கருணாநிதிக்கு கருப்புக் கொடி காட்டினார்கள். தாங்கள் புழங்கும் இடமாக இருக்கும் நீதிமன்றத்த்திற்குள்ளேயே வழக்கறிஞர்களை கருணாநிதியின் அடியாட்கள் கொடூரமாகத் தாக்கினார்கள். கருணாநிதி கையில் இருக்கும் போலீஸ்துரையோ அதை கைகட்டி வேடிக்கை பார்த்தது. அந்த நிகழ்வில் தாக்கப்பட்டது வழக்கறிஞர்கள் மட்டுமல்ல செய்தி சேகரிக்க வந்த ஊடகவியளார்களும் கூடத்தான்! ஜெயா தொலைக்காட்சி கேமிராமேன் கொடூரமான தாக்கபப்ட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மிகச் சமீபமாக கட்டுரை எழுத்தாளரும் பேச்சாளருமான பழ, கருப்பையாவும் அவரது வீடும் தாக்குதலுக்குள்ளானது அவரது அரசியலோடு நாம் எள்ளளவும் உடன்படாத நிலையில் அவருக்கும் தன் கருத்தை வெளிப்படுத்தும் உரிமையை அரசியல் சாசனம் அவருக்கு வழங்கியுள்ள நிலையில் தனக்குப் பிடிக்காத கருத்தை தெரிவித்தார் என்பதால் அவரையும் அவரது குடும்பத்தினரையும் கொடூரமாகத் தாக்கினார்கள்.

கடந்த காலங்களின் கருணாநிதியின் குடும்ப ஊடகங்களைச் சார்ந்த பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்ட போதெல்லாம், நக்கீரன் குழுமம் கடந்த அதிமுக ஆட்சியில் நசுக்கப்பட்ட போதெல்லாம் அறியப்பட்ட ஊடகவியளார்கள் என்று சொல்லப்படும் பெரும் மேதைகளை எல்லாம் தன் தலைமையில் ஒருங்கிணைத்து ஜெயலலிதாவுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டங்களை நடத்திய கருணாநிதி இன்று அதே அடக்குமுறையை ஊடகவியளார்கள்மீது ஏவுகிறார். ஆனால் தட்டிக் கேட்பதற்கு நாதியில்லை. ஜெயலலிதா ஆட்சியின் போது ஊடகஒடுக்குமுறைக்கு எதிராக தங்களைக் காட்டிக் கொண்ட சக்திகளோ இப்போது கருணாநிதி அரசின் ஒடுக்குமுறைகளைக்கு ஊடக உதவிகளைச் செய்கிறார்கள். அல்லது கண் மூடி வாய் பொத்தி மௌனிகளாகி விட்டனர்.

ஈழ ஆதரவுப் போராட்டங்கள்…ஏன் இத்தனை கொடூரம்?

2008 - மத்தியில் இருந்து தமிழகத்தில் ஈழப் போருக்கு ஆதரவான போராட்டங்கள் எழுந்தன. 2009 ஜனவரியில் தொடங்கி மே மாதம் வரை பேரினவாத இலங்கை அரசால் முன்னெடுக்கப்பட்ட போரில் ஈழ மக்கள் கொல்லப்பட அதைக் கண்டு தமிழக ஈழ விடுதலை ஆதரவாளர்கள் கொதித்தெழுந்தனர். தியாகி முத்துக்குமார் தன்னுயிரை ஈந்து ஈழத்தில் போர் நிறுத்தம் கோரினார். ஆனால் முத்துக்குமாரின் மரண நிகழ்வுகளில் இருந்து கருணாநிதி ஈழ ஆதரவாளர்கள் மீதான ஒடுக்குமுறையைத் துவக்கினார்.

மாபெரும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது உயிர்நீத்த்த தியாகிகளுக்கு வருடா வருடம் மலர் அஞ்சலி செலுத்தும் கருணாநிதி ஈழத்திற்காக உயிர் நீத்தவர்களை மனநோயாளிகள், குடும்பப் பிரச்சனைக்காக தீக்குளித்தார்கள் என்று போலீசை ஏவி பிரச்சாரம் செய்தார்.

இன்றுவரை முத்துக்குமாருக்கு ஒரு சிலை கூட அதுவும் தனியார் இடத்தில் வைக்க முடியாத அளவுக்கு காட்டாட்சி நடந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில், இன்றைய கருணாநிதி அரசின் உச்சக்கட்டக் கோபம் என்பது ஈழப் போராட்டத்தை ஒட்டியே வெளிப்பட்டது. கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகமெங்கிலும் சுமார் 65 பேர் தேசியப் பாதுகாப்புச் சட்டத்திலும் குண்டர் சட்டத்தின் கீழும் சிறையிலடைக்கப்பட்டனர். இவர்கள் அனைவருமே ஏதோ ஒரு வகையில் மக்கள் பிரச்சனைகளுக்காக போராடியவர்களாகவோ அல்லது ஈழத்திற்காக போராடியவர்களாவோ இருக்கிறார்கள்.

தமிழக வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்தக் கைதும் அடக்குமுறையும் அளவு கடந்து சென்றது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்த 22 பேர், மீதும் பெரியார் திராவிடர் கழத்தைச் சார்ந்த 6 பேர் மீதும், மதிமுகவினர் 3 பேர் மீதும், நாம்தமிழர் இயக்கத்தவர் 3 பேர் மீதும், தமிழ் தேச பொதுவுடமைக் கட்சியைச் சார்ந்த ஒருவர் என சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் மீது ஈழத்தில் போர் நிறுத்தம் கேட்ட காரணத்திற்காக இச்சட்டம் பாய்ந்துள்ளது.

ஆனால் இச்சட்டதின் கீழ் கைது செய்யபப்ட்ட ஒருவர் மீது கூட தேசியப் பாதுகாப்புச் சட்டம் உறுதியாகாமல் அனைவருமே பல மாத சிறைவாசத்தின் பின்னர் வெளியேறி வந்தனர். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலையொட்டி இந்த அடக்குமுறை அதன் உச்சக்கட்டத்தை அடைந்தது. ஈழத்தின் கோரத்தை சித்தரிக்கும் குறுந்தகடுகள் வைத்திருந்தவர்களைக் கூட சிறையிலடைத்தனர். இதன் உச்சக்கட்டமாக அராஜகமாக சென்னை இராயப்பேட்டையில் உள்ள பெரியாரின் சிலை திமுக தொண்டர்களாலேயே அடித்து நொறுக்கி வீசப்பட்டதோடு, பெரியார் நூலகமும் தீக்கிரையாக்கப்பட்டது.

இதனுடைய தொடர்ச்சியாக செம்மொழி மாநாடு நடத்தப்பட்டது.

செம்மொழி மாநாட்டை அரசு பெரும் பொருட் செலவில் அரசு இயந்திரங்களின் உதவியோடு கட்டி எழுப்பி நடத்தினாலும் அதற்கு உலகெங்கும் வாழும் கணிசமான தமிழர்களிடம் எதிர்பலைகளையும் உருவாக்கியது கொடூரமான இன அழிப்புப் போரின் காயங்கள் ஆறுவதற்குள் இப்படியான மாநாடு தேவையில்லை என்பது அவர்களின் வாதம். தமிழர்கள் எல்லாம் ஊனமாக்கப்பட்டு முட்கம்பி வேலிகளுக்குள் வதைபடும் போது தமிழுக்கு விழா தேவையில்லை என்பது தமிழக எதிர்ப்பாளர்களின் கருத்து. அதையொட்டி துண்டுப்பிரசுரங்கள்,சுவரொட்டிகள், எஸ்,எம்,எஸ்கள் மூலம் பலரும் செம்மொழி மாநாட்டுக்கு எதிராக பிரச்சாரம் செய்தனர்.

கோவை, மதுரை, விழுப்புரம், போன்ற பகுதிகளில் சுமார் முப்பது பேரை எஸ்.எம்.எஸ் அனுப்பி இந்தியா மீது போர் தொடுத்ததாக தேசத் துரோக வழக்கில் சிறையிலடைத்தார் கருணாநிதி. அது போல தமிழகமெங்கிலும் செம்மொழி மாநாட்டுப் பிரச்சாரங்கள் சூடு பிடித்த நிலையில் விழுப்புரம் சித்தணியில் தண்டவாளங்கள் தகர்க்கப்பட்டது. தமிழகம் முழுக்க சங்கிலித் தொடர் போல இப்படி தண்டவாளங்கள் தகர்க்கப்பட்டு சாகசமாக இரயில்கள் நிறுத்தப்பட்டன.

இத்தகர்ப்பில் ஈடுபட்டவர்கள் குறித்து போலீஸ் கனத்த மவுனத்தை இப்போது சாதித்தாலும் அப்போது ஈழ விடுதலை ஆதரவாளர்களை நோக்கியே இச்சமபவத்தைக் கொண்டு சென்றது போலீஸ். தமிழகம் முழுக்க கடுமையான பதட்டத்தை அரசே தோற்று விக்கிறதோ என்ற அச்சம் பரவியதும் அப்போதுதான். இப்படி இந்த ஆட்சியில் அடக்குமுறைக்கும் அவலத்திற்கும் எத்தனையோ எடுத்துக்காட்டுகளை அடுக்கிக் கொண்டே செல்ல முடியும். இதனுடைய உச்சக்கட்ட வடிவம்தான் திரைப்பட இயக்குநர் சீமான் கைது செய்யப்பட்டமை. அவர் பேசியதை நியாயப்படுத்து நமது நோக்கமல்ல ஆனால் நமது மீனவர்கள் தொடர்ந்து சிங்கள அரசாலும் இலங்கை மீனவர்களாலும் தாக்கப்படுகிற நிலையில், பல பத்தாண்டுகளாக இக்கொடுமை நீடித்து வரும் நிலையில் மத்திய மாநில அரசுகள் நமது மீனவர்களைக் காக்கும் படி ஏதாவது ஒரு நடவடிக்கை எடுத்ததுண்டா?

மத்திய, மாநில அரசுகள் தமிழக மீனவர்கள் விஷயத்தில் பாரபட்சமாக நடந்து கொள்வதில் இருந்தே நாம் சீமான் பேசியதை அணுக வேண்டும். தவிறவும் தமிழக மீனவர்களின் உயிருக்கும் உடமைக்கும் உழைப்பின் உரிமைக்கும் உரிய உத்திரவாதத்தை வழங்கி விட்டு பின்னர் சீமான் பேசியது இறையாண்மைக்கு எதிரானதா? என்பதை அணுகியிருக்க வேண்டும் செயலற்ற இரண்டு அரசுகள். உணர்ச்சி வெளியில் பேசுகிறவர்களை மட்டும் சிறையிலடைப்பது ஜனநாயகத்திற்கு விரோதமான போக்காகும்.

ஈழ மக்களுக்காக போராடுகிற சக்திகள் இன்றுவரை ஒடுக்கப்படுகிற நிலையில் சீமான் கைது மேலும் அவர்களை அச்சுறுத்துகிறது. இனி இந்தியாவின் மத்திய மாநில அரசை மட்டுமல்ல இலங்கை அரசையோ ராஜபட்சேவையோக் கூட தமிழகத்தில் விமர்சித்தான் கடுமையான சட்டங்கள் பாயும் என்பதான நிலை தமிழகத்தில் நிலவுவதாக போராடும் சக்திகள் கருதுகிறார்கள்.

சட்ட ஒழுங்கும் காவல்துறையும்

தமிழக காவல்துறையினரை பொதுவாக ஸ்காட்லாந்து யார்ட் போலீசுக்கு இணையாக ஒப்பிட்டுப் பேசுகிற பழக்கத்தை எவரோ துவக்கி வைக்க இப்போதும் அது சடங்கான வார்த்தையாகப் பேசப்பட்டு வருகிறது

கடந்த ஆட்சியின் போது காவல்துறை தனக்கு இழைத்த அநீதியை வெட்ட வெளிச்சமாக்கிய கருணாநிதி இன்று தனது விருப்பங்களை ஈடேற்றும் காவல்படையாக காவல்துறையை மாற்றி விட்டார். கருணாநிதி ஆட்சிக்கு வந்த இந்த நான்காண்டுகளில் தமிழகத்தில் நடந்த என்கவுண்டர்களின் எண்ணிக்கை 25. கன்னியாகுமரி மாவட்டத்தில் ராஜன் என்பரில் தொடங்கி கொற நடராஜன் என்பவர் கொல்லப்பட்டது வரை 25 ரௌடிகள் காவல்துறையினரால் வீழ்த்தப்பட்டிருக்கிறார்கள். சட்டம் ஒழுங்கு சரியில்லை என்ற சர்ச்சை எழும் போதெல்லாம் இம்மாதிரி ரௌடிகள் சிலரை கேள்விகளுக்கிடமின்றி கொன்று விடுகிறார்கள்.

ஆனால் இவர்களைக் கொன்றதால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாகி விட்டதா? முன்னை விட கொலை, கொள்ளை, கடத்தல், வழிப்பறி எல்லாம் அதிகமாகியிருக்கிறது. உண்மையான காரணங்களைக் கண்டறிந்து அதை சரி செய்வதோ, குற்றவாளிகளைப் பிடித்து நீதியின் முன்னால் நிறுத்தி தண்டிப்பதையோ விட்டு விட்டு போலீஸ் இப்படியான சட்டவிரோத கொலைகளைச் செய்து கொண்டிருக்கிறது. பத்தட்டமான மாநிலங்களாக அறியப்பட்டுள்ள அஸ்ஸாம், சட்டீஸ்கர், மேற்குவங்கம், குஜராத், போன்ற மாநிலங்களிலும் காஷ்மீர் போன்ற பகுதிகள் தவிர்த்த அமைதி நிலவுவதாக நாம் நம்பிக் கொண்டிருக்கும் இந்தியாவின் ஏனைய மாநிலங்கள் எந்த ஒன்றிலும் இந்த மாதிரி சட்டவிரோத என்கவுண்டர்கள் நடந்ததில்லை. இது மிக மிக ஆபத்தான ஏதேச்சதிகார போக்காக வளர்ந்து நிற்கிறது.

தனியாக வீட்டில் இருக்கும் பெண்களைத் தாக்கி கொலை செய்யும் நிகழ்வுகள் சர்வசாதாரணமாகி விட்ட நிலையில் மக்களை பாதுகாக்க வேண்டிய போலீஸ் என்ன செய்து கொண்டிருக்கிறது என்ற கேள்வி எழலாம். அதுதான் நாம் கேட்க விரும்பும் கேள்வியும். இராமேஸ்வரத்தில் அன்றாடம் நமது மீனவர்கள் தொழில் செய்ய முடியாமல் இலங்கைக் கடற்படையால் கொல்லப்பட அங்கே அறிவிக்கப்படாத போர் ஒன்றை நடத்திக் கொண்டிருக்கிறது பேரினவாத இலங்கை அரசு.

ஒரு பக்கம் ரௌடிகளைக் கொன்று விட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று பொதுப்புத்தியில் பேசும் திறமையற்ற காவல்துறை இன்னொரு பக்கம் அரசியல் ரௌடிகளின் முன்னால் கைகட்டி நிற்கிறது. சாதாரண நடுத்தர மக்கள் வசிக்கும் வீடுகளுக்குள் புகுந்து வீடுகளை ஆக்ரமிப்பதும் விவசாய நிலங்களை மிரட்டி அச்சுறுத்தி வாங்குவதும், இரட்டைப் பட்டா தயாரித்து நிலங்களை அபகரிப்பதும் தொடர்ந்து வருகிறது.

அரசியல் ரௌடிகளால் நடத்தப்படும் போக்கும் கடந்த சில மாதங்களாக தமிழகம் முழுக்க அதிகரித்து வருகிறது. மக்கள் அச்சமடைந்த நிலையில் தங்களின் உணர்வுகளைக் கூட வெளிப்படுத்தும் திராணியற்ற மன நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள். ஊடகங்களோ ஒடுக்கும் சக்திகளுக்கு ஆதரவாக நிற்கும் போது நாம் எந்த அரசியல் கட்சிகளையும் சாராமல் மக்களின் பக்கம் நிற்க விரும்புகிறோம்.

ஊடகத்துறை நண்பர்களே!


அரசியல்துறையினரே! அறிவுஜீவிகளே! இலக்கியவாதிகளே! பொது நிலையினராகிய பொது மக்களே இந்த அடக்குமுறைகள் ஏவப்படுவதனை நீங்கள் அறிவீர்களா? அல்லது உங்களுக்கும் இதற்கும் தொடர்பில்லையா? இன்று எங்கள் மீது ஏவப்படும் ஒடுக்குமுறை நாளை உங்கள் மீது ஏவப்படலாம். ஆகவே எங்களோடு கைகோருங்கள்…மக்கள் மீதான ஊடகங்கள் மீதான் ஒடுக்குமுறைக்கு எதிராக குரல் கொடுங்கள்.

கருணாநிதி அரசின் மக்கள் விரோதப்போக்கு - எழுச்சிக் கூட்டம் : கருத்துரிமைக்கான கூட்டமைப்பு.

1 comment:

  1. rajkumar,thiruvarurAugust 4, 2010 at 7:47 PM

    தமிழ்நாடு அரசு வழங்கிய இலவச வண்ணத்தொலைகாட்சி மூலம் மானாட, மயிலாட நிகழ்ச்சி, சினிமா நிகழ்ச்சிகள், நெடுந்தொடர்கள் ஆகியவற்றை பார்த்து நாம் மகிழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் நமது கருத்துரிமை சத்தமின்றி களவாடப்படுவது உங்களுக்குத் தெரியுமா?

    அதைத்தான் தமிழ்நாட்டில் நாம் பார்க்க முடிகிறது...

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails